பிரசவத்தின்போது பலியான பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் தர்மபுரியில் பரபரப்பு
பிரசவத்தின்போது பெண் பலியானதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள முத்தானூர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல், லாரி டிரைவர். இவருடைய மனைவி ரேகா (வயது 27). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரேகா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு நேற்று முன்தினம் மாலை பிரவச வலி ஏற்பட்டது. இதனால் கடத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் ரேகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்கு பின்னர் ரேகாவுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேகாவை தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரேகா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர் உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் பிரசவ வார்டு முன்பு உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேகாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது ரேகாவின் உறவினர்கள் கூறும்போது, ரேகா கடந்த சில மாதங்களாக கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். அங்கு பணிபுரிந்த ஒருவரின் பேச்சை நம்பி தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு சேர்த்தோம். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றிருந்தாலே ரேகாவை இழந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ரேகாவிற்கு முறையான சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீதும் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தினார்கள்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து ரேகாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பிரசவ சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story