நாமக்கல், இலுப்புலியில் அரசு பள்ளிகளுக்கு கல்வி சீர்வரிசை
நாமக்கல், இலுப்புலியில் அரசு பள்ளிகளுக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல்,
நாமக்கல் அழகு நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 50 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கல்வி சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பள்ளிக்கு தேவையான ஸ்பீக்கர், மைக்செட், மின்விசிறி, பிளாஸ்டிக் வாளி, குடம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பொருட்களுடன் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியை விஜயலட்சுமியிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் சந்திரசேகரன், அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் சரஸ்வதி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு அருகே இலுப்புலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஸ்மார்ட் கிளாசுக்கான எல்.இ.டி. டி.வி., பேனா, நோட்டு புத்தகம், நாற்காலி, மேஜை, பென்சில் பள்ளிக்கு தேவையான தளவாட பொருட்கள் ஆகியவற்றை கல்விச்சீராக வழங்கும் விழா நடைபெற்றது.
இதையொட்டி இலுப்புலி மாரியம்மன் கோவிலில் இருந்து கல்வி சீர்பொருட்களை மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் பள்ளிக்கு எடுத்து வந்தனர். ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story