சங்ககிரியில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் 187 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்
சங்ககிரியில் நடந்த சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 187 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
சங்ககிரி,
சேலம் மாவட்ட மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில் தாலுகா அளவில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
அப்போது அவர் பேசும் போது, ‘அரசு அலுவலர்களை தேடி மக்கள் செல்வதை விட, மக்களை தேடி அரசு அலுவலர்கள் சென்று அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிவதற்காக இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.
சிறப்பு முகாமில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் உள்பட 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார். மேலும் உதவித்தொகை கேட்டு மனு அளித்த 2 பேருக்கு உடனடியாக உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. முகாமில் சங்ககிரி உதவி கலெக்டர்(பொறுப்பு) வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாங்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் எந்திரம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு முகாமையும் கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து சங்ககிரி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வீராட்சிபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் தேங்கி உள்ள தண்ணீரை எடுத்து பொதுமக்களுக்கு பயன்படுத்த அங்கு சென்று கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார். அதன்பிறகு ஒலக்கசின்னானுார் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுகிறதா? தெருவிளக்குகள் எரிகிறதா? கழிப்பிடம் சரியாக பயன்படுத்தப்படுகிறதா? எனஆய்வு செய்தார். மேலும் கோட்டவருதம்பட்டி ஊராட்சி பகுதியிலும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துணை கலெக்டர் சாரதா ருக்மணி, தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story