திருப்பூரில் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த பா.ஜனதா பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய கும்பல் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
திருப்பூரில் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த பா.ஜனதா பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பவானி நகரை சேர்ந்தவர் முனீஸ்வரா பாண்டியராஜா(வயது 39). இவர் பா.ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த 10–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வந்தார். இதற்காக இவர் தனது நண்பருக்கு சொந்தமான காரை வாங்கி பயன்படுத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 12 மணி அளவில் கொங்கு நகரில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகம் முன்பு காரை நிறுத்தி விட்டு முனீஸ்வரா பாண்டியராஜா வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் வந்து அந்த காரை அடித்து நொறுக்கி கண்ணாடிகளை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றது. அங்கிருந்தவர்கள் அதை பார்த்து முனீஸ்வரா பாண்டியராஜாவுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் உருட்டுக்கட்டையால் காரை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முனீஸ்வரா பாண்டியராஜா அளித்த புகாரின் பேரில், காரை சேதப்படுத்தியதாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், பாலா, கார்த்திக், மோகன் மற்றும் 2 பேர் என மொத்தம் 6 பேர் மீது திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜனதா பிரமுகரின் காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.