உத்தனப்பள்ளியில் சோகம்: எருது விடும் விழாவில் 2 மாடுகள் சாவு 40 பேர் காயம்
உத்தனப்பள்ளியில் எருது விடும் விழாவில் 2 மாடுகள் இறந்தன. 40 பேர் காயம் அடைந்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது. இதற்காக ராயக்கோட்டை, சூளகிரி, உத்தனப்பள்ளி, ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர்.
இதன் பிறகு காளைகளின் கொம்புகளில் பலூன் மற்றும் பதாகைகள், பரிசு பொருட்கள் கட்டப்பட்டு ஓடவிடப்பட்டன. சீறி பாய்ந்து ஓடிய காளைகளை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டு இருந்த வண்ண பதாகைகளை பறிக்க இளைஞர்கள் துள்ளி குதித்தபடி ஓடினார்கள். இதில் காளைகள் முட்டி வெங்கட்ராமய்யா, ராமய்யா, கிருஷ்ணப்பா, கிருஷ்ணகுமார், ஆனந்த் உள்பட 40 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சைகள் அளித்தனர்.
இந்த நிலையில் எருது விடும் விழாவில் ராயக்கோட்டை கீழ் தெருவை சேர்ந்த எல்லப்பன் என்பவரின் மாடு ஓடவிடப்பட்டது. அப்போது மாட்டின் காலில் கயிறு சிக்கி கீழே விழுந்தது. இதில் மாட்டின் தலை மடங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.
இதேபோல சூளகிரி அருகே உள்ள சக்கார்லு பகுதியைச் சேர்ந்த பசவராஜ் (30) என்பவர் வளர்த்து வந்த மாடு ஓட விடப்பட்டது. ஆக்ரோஷமாக அந்த மாடு ஓடியபோது நேர் எதிரில் உத்தனப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாடு வந்தது. 2 மாடுகளும் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் பசவராஜ் வளர்த்து வந்த மாடு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தது. மற்றொரு மாடும் படுகாயம் அடைந்தது. அதை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள்.
இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு இறந்த மாடுகள் அடக்கம் செய்யப்பட்டன. முன்னதாக இறந்த மாடுகளுக்கு மாலைகள் அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த எருது விடும் விழாவை காண உத்தனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதையொட்டி உத்தனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story