சொக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் கியாஸ் கசிவால் தீ பெரும் விபத்து தவிர்ப்பு


சொக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் கியாஸ் கசிவால் தீ பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 3:45 AM IST (Updated: 13 Feb 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

சொக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. சரியான நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தலைவாசல்,

தலைவாசல் அருகே உள்ள சொக்கனூர் அக்ரஹாரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது.

சத்துணவு அமைப்பாளராக நல்லம்மாள், சமையலராக பொன்னி ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை நல்லம்மாள், பொன்னி ஆகியோர் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் குழாயில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

இதைத்தொடர்ந்து நல்லம்மாள், பொன்னி ஆகியோர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உதவியுடன் மாணவ-மாணவிகள் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வரப்பட்டனர். அப்போது அந்த வழியாக அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார், முனியாண்டி, மகேஷ் ஆகிய 3 வாலிபர்கள் சென்றனர். அவர்கள் மாணவ-மாணவிகள் வெளியே நிற்பதை பார்த்து, நடந்த சம்பவத்தை கேட்டனர்.

பின்னர் 3 பேரும், சாக்குப்பையை தண்ணீரில் நனைத்து, சிலிண்டரின் மீது போட்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சிலிண்டரை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு பிரிவு) செல்வம், ஒன்றிய ஆணையாளர் வெங்கட்ரமணன், வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன், கிரிஜா ஆகியோரும் சொக்கனூர் தொடக்கப்பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு சமைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் செய்து, மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.

Next Story