சிவகங்கை அருகே வைக்கோல் லாரியில் திடீர் தீ
சிவகங்கை அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை,
தஞ்சை மாவட்டம், நீடாமங்கலத்தில் இருந்து சிவகங்கையை அடுத்த சக்கந்திக்கு வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று சென்றது. மதுரையைச் சேர்ந்த டிரைவர் பழனிவேலு (வயது 30) லாரியை ஓட்டினார்.
லாரி சக்கந்தி அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியின் பின்னால் இருந்து திடீரென புகை வந்து உள்ளது. இதனை கவனித்த டிரைவர் லாரியை உடனடியாக நிறுத்தி விட்டு கீழே இறங்கிப் பார்த்தார்
அப்போது லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சிவகங்கை தீயணைப்பு நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து வைக்கோலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் தகவல் அறிந்ததும் சிவகங்கை தாசில்தார் ராஜா தலைமையில் வருவாய் தறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் ரூ.50 ஆயிரம் வரை சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. மின் வயர் உரசியதால் லாரியில் இருந்த வைக்கோலில் தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.