பஸ் வசதி கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


பஸ் வசதி கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:30 AM IST (Updated: 13 Feb 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில் பஸ் வசதி கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய 3 ஒன்றிய பகுதிகளில் பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் திருச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மணப்பாறை பஸ் நிலையத்திற்கு வந்து தான் செல்ல வேண்டும். இவர்களில் பலரும் பஸ் பாஸ் வைத்துள்ளனர்.

மாணவ, மாணவிகள் காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்ல பஸ் நிலையம் வந்தால் மாணவ-மாணவிகளை பஸ்சில் ஏற்ற மறுக்கப்படுகிறது. சில பஸ்களில் பஸ் பாசில் செல்ல முடியாது என்றும், பல பஸ்கள் சம்மந்தப்பட்ட இடத்தில் பஸ் நிறுத்தம் இல்லை என்றும் கண்டக்டர்களால் காரணம் கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாமலும், பல நாள் கல்லூரிக்கே செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், நேற்றும் கடும் அவதிக்கு ஆளான மாணவர்கள், மணப்பாறை பஸ் நிலைய நுழைவு வாயிலில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், மணப்பாறை போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பஸ் வசதி செய்து தருவதாக கூறியதோடு அவர்களை ஒரு பஸ்சில் ஏற்றி கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story