முள்ளிமுனை ஊராட்சியில் முடங்கி கிடக்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
முள்ளிமுனை ஊராட்சியல் முடங்கி கிடக்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொண்டி,
திருவாடானை யூனியன் முள்ளிமுனை ஊராட்சி 3,000–க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. கடற்கரை கிராமம் என்பதால் இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை என்பது காலங்காலமாக இருந்து வருகிறது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம் முடங்கி போனதால் சில வருடங்களாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த குடிநீரும் முறையாக கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் தினமும் இங்கு டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வந்து விற்கப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.5–க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ஒரு குடும்பத்திற்கு தினமும் ரூ.100 முதல் ரூ.200 வரை செலவு செய்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதனிடையே கடந்த 2013–ம் ஆண்டு முள்ளிமுனை ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுமார் ரூ.1½ கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஊராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவால்கள் இருந்து வந்தது. கடந்த காலங்களில் 2 நாட்களுக்கு ஒருமுறை சுமார் 40ஆயிரம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு பயிற்சி முடித்த ஒரு ஆபரேட்டர், மின் கட்டணம், பழுதுபார்க்கும் செலவுகள், மற்றும் இதர செலவுகள் என மாதம் ரூ.50ஆயிரம் வரை ஊராட்சிக்கு தேவைப்பட்டது. இதனால் போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில் ஊராட்சியின் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டு வந்ததது.
திடீரென மோட்டார் மற்றும் எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் டென்மார்க்கில் இருந்து தான் இதற்கு தேவையான உதிரி பாகங்கள் வரவேண்டும். அதுவரை குடிநீர் வழங்க இயலாது. இவ்வாறு கடும் சிரமங்களுக்கு மத்தியில் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம் கடந்த சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு முடங்கிப் போனது.
அதனை தொடர்ந்து இந்த திட்டத்தை மாவட்ட நிர்வாகம் நேரடியாக செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் இதனை செயல்படுத்த தேவையான அனைத்து செலவுகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்று அதற்கான நிதியை மாதந்தோறும் ஊராட்சிக்கு வழங்கி பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் முள்ளிமுனை ஊராட்சியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து முள்ளிமுனை ஊராட்சியில் மீண்டும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.
ஆனால் சில காலம் மட்டுமே செயல்பட்ட இந்த திட்டம் மறுபடியும் முடங்கிப் போய்விட்டது. இவ்வாறு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை பெரியஅளவில் உள்ளது.
எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.