3-வது காலாண்டில் என்.எல்.சி. ரூ.329 கோடி நிகர லாபம் ஈட்டியது


3-வது காலாண்டில் என்.எல்.சி. ரூ.329 கோடி நிகர லாபம் ஈட்டியது
x
தினத்தந்தி 13 Feb 2019 4:15 AM IST (Updated: 13 Feb 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

3-வது காலாண்டில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ரூ.329 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் நிதிநிலை செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின், 3-வது காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை) 63 லட்சத்து 5 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுத்துள்ளது. மின்சக்தியின் தேவைக்கு ஏற்பவும், பழுப்பு நிலக்கரியை வாங்கும் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்பவும் பழுப்பு நிலக்கரி உற்பத்தியானது கட்டுப்படுத்தப்பட்டதன் மூலம் கடந்த ஆண்டைவிட உற்பத்தி சற்று குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் இந்நிறுவனம் 499 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின்சார விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 543 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின்சக்தியை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 9 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

31.12.2018 அன்று முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.329 கோடியே 49 லட்சத்தை நிகர லாபமாக பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பெற்ற ரூ.313 கோடியே 80 லட்சத்தைவிட இது 5 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.1,807 கோடியே 50 லட்சமாக இருந்த இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.2,070 கோடியே 29 லட்சமாக உயர்ந்துள்ளது.

மின்வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்த மின்சக்தியை, அவை பயன்படுத்தாமல் விட்டதன் மூலம், இந்நிறுவனம் கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தான் உற்பத்திசெய்ய வேண்டிய அளவில் 33 கோடியே 66 லட்சம் யூனிட் மின்சக்தியை குறைத்து உற்பத்தி செய்தது. ஆனால் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவைவிட 24 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மட்டுமே மின்வாரியங்கள் குறைவாக பயன்படுத்தியிருந்ததால் விற்பனையில் உயர்வு ஏற்பட்டது.

நெய்வேலியில் அமைக்கப்பட்டு வரும் 2,500 மெகாவாட் புதிய அனல்மின் நிலையத்தின் ஒரு மின்உற்பத்திப் பிரிவில் 28.12.2018 அன்று சோதனை முறையில் நீராவி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டி, பழுப்பு நிலக்கரியில் செயல்படவிருக்கும் 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் மின்உற்பத்திப் பிரிவு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல் என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story