சிவகாசியில் 2–வது நாளாக தர்ணா: பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு


சிவகாசியில் 2–வது நாளாக தர்ணா: பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு
x
தினத்தந்தி 13 Feb 2019 5:00 AM IST (Updated: 13 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் 2–வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று அரசியல் கட்சி பிரமுர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகள் கடந்த 3 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள், பட்டாசு தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டு வரும் பலர் நேற்று முன்தினம் சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2–வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் அதிகஅளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

முதல் நாள் போராட்டத்தின் போது பட்டாசு ஆலை அதிபர்கள், பட்டாசு வணிகர்கள், விற்பனை பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில் நேற்று நடைபெற்ற 2–வது நாள் போராட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசு தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான சபையர் ஞானசேகரன் கலந்து கொண்டு பேசியதாவது:–

இந்த தொழிலை காப்பாற்ற வேண்டிய அரசுகளே இதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஓட்டளித்த மக்களுக்கு துரோகம் செய்வது போல் ஆகும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் இந்த தொழிலை பாதுகாக்க முன்வருபவர்களாக இருக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பாக உள்ள தலைவரை ஆதரிக்க வேண்டும். ரூ.2ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்து இருப்பது தேர்தலுக்காகத்தான் என்று நான் நினைக்கிறேன். தற்காலிக முடிவு காணாமல் பட்டாசு தொழிலை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என போராடி வரும் நிலையில் அதில் தமிழக அரசு தயக்கம்காட்டி வருகிறது. ஜல்லிகட்டுக்கு கொடுத்த முக்கியம் ஒரு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது தர அரசு ஏன் மவுனமாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் சிவகாசி திலகபாமா பேசியதாவது:–

ஆண்டுக்கு ஒரு நாள் கொண்டாடும் தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழுல் பாதிக்கப்படுகிறது என்று சிலர் வாதாடுகிறார்கள். தீபாவளி இல்லாத மற்ற நாட்களில் கூட சுற்றுச்சூழல் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மோசமாகிறது. இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள். மது குடித்து தினமும் பலர் நோய்வாய்பட்டு இறந்து போகிறார்கள். புகையிலை பழக்கத்தால் பலர் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதை எல்லாம் தடை செய்யாத மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியாக இருக்க ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அதை 80 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தால் தற்போது அந்த பொருளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என்று கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

இந்த பகுதி மக்களுக்கு புதிய தொழிலை மத்திய, மாநில அரசுகள் தொடங்கி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இருக்கிற தொழிலை முடக்க நினைக்க வேண்டாம். வந்தவர்களுக்கு வேலை வழக்கி அவர்களை பாதுகாத்த சிவகாசி தற்போது தான் சொந்த மக்களை அகதிகளாக அலையவிட்டு இருக்கிறது. இந்த நிலை மாற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து சிவகாசியில் முடங்கி கிடக்கும் பட்டாசு தொழிலை பழையபடி நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஜகாங்கீர் பேசியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் கடந்த 3 மாதங்களில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. பணப்புழக்கம் முற்றிலுமாக இல்லாத நிலை உருவாகிவிட்டது. நோயால் பாதிக்கப்பட்ட பட்டாசு தொழிலாளிகள் உரிய சிகிச்சை பெற கூட போதிய பணம் இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. ஒரு பெண்மணி தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் இந்த மண்ணில் நடந்துள்ளது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சிவகாசி பகுதி மக்களை காப்பாற்றும் நோக்கில் பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்ட தடைகளை உடனே விலக்கி கொண்டு அந்த தொழில் மீண்டும் பழையபடி நடக்க தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

போராட்ட களத்தில் பட்டாசு தொழிலாளி முத்துமாரி பேசுகையில்,

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவனால் வேலை செய்ய முடியாத நிலையில் நான் தான் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று வந்தேன். இதில் கிடைத்த வருமானத்தை கொண்டு குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். தற்போது கடந்த 3 மாதமாக வேலை இல்லை. என் குடும்பம் வறுமையில் வாடுகிறது. இதே நிலை நீடித்தால் நானும், எனது குடும்பமும் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றார்.

பட்டாசு தொழிலாளி சாந்தி பேசுகையில்,பலர் தாலி பறிபோக காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை திறக்க எந்த தடையும் இல்லை. பலரை வாழவைக்கும் பட்டாசு தொழிலுக்கு மட்டும் தடையா? இதே நிலை நீடித்தால் நானும், எனது குடும்பத்தில் உள்ளவர்களும் தற்கொலை செய்து கொள்ளவது தான் முடிவு என்றார்.

இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜாதிருப்பதி, சிவகாசியை சேர்ந்த ராஜ்குமார் உள்பட பலர் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதே போல் சிவகாசி வக்கீல் சங்கத்தை சேர்ந்தவர்கள் டான்பாமா (தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் ) தலைவர் ஆசைதம்பியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட ராஜலட்சுமி என்ற பட்டாசு தொழிலாளி திடீரென மயங்கி விழுந்தார்.அவருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. நேற்று முன்தினத்தைவிட நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது அதிகஅளவில் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இதனால் கூடுதல் இருக்கைகள் கொண்டு வரப்பட்டு பந்தல் அமைக்கப்பட்டு தொழிலாளர்கள் அமர வைக்கப்பட்டனர்.


Next Story