விருதுநகரில் வீட்டு வரி பல மடங்கு உயர்வு மறு பரிசீலனை செய்ய கோரிக்கை


விருதுநகரில் வீட்டு வரி பல மடங்கு உயர்வு மறு பரிசீலனை செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2019 4:00 AM IST (Updated: 13 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் அரசு உத்தரவுக்கு முரணாக பல மடங்கு வீட்டு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் நிலையில் நகராட்சி நிர்வாகம் வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

முன்னாள் விருதுநகர் நகராட்சி துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, நகராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு சொத்துவரி உயர்வை பொருத்தமட்டில் குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதமும் வரி உயர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் விருதுநகரில் அரசு உத்தரவுக்கு முரணாக குடியிருப்பு பகுதிகளுக்கு பல மடங்கு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நகர் 14-வது வார்டு பகுதியில் உள்ள கொல்லர்தெரு, சந்திக்கூடதெரு, தெற்குரதவீதி, பெரியகிணற்றுதெரு, 29-வது வார்டில் உள்ள பல குடியிருப்புகளுக்கு 50 சதவீத உயர்வுக்கு பதிலாக பல மடங்கு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 வீட்டு வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வரி ரூ.5000 என தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரூ.1000 வரி விதிப்புள்ள வீட்டுக்கு ரூ.10 ஆயிரமாக வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

தவறான அளவீடு காரணமாக வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்த காலங்களில் 25 சதவீதத்துக்கு மேல் வீட்டு வரி உயர்வு செய்யப்படவில்லை. ஆனால் தற்போது மிக அதிகமாக வீட்டுவரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுரை இல்லாத வகையில் குப்பை வரியாக ஒவ்வொரு குடியிருப்புக்கும் 6 மாதத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.180 வசூலிக்கப்படுகிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளப்படி வீடுகளுக்கு 50 சதவீத வரி உயர்வும், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் செய்து உத்தரவிடுவதோடு, நகர் முழுவதும் உயர்த்தப்பட்டுள்ள வரி விதிப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story