சந்து கடையை அகற்ற மறியலில் ஈடுபட்டவர்களுக்கு மிரட்டல்: சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை பாதுகாப்பு வழங்க கோரிக்கை


சந்து கடையை அகற்ற மறியலில் ஈடுபட்டவர்களுக்கு மிரட்டல்: சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை பாதுகாப்பு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2019 4:15 AM IST (Updated: 13 Feb 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

சந்து கடையை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்களுக்கு மிரட்டல் வருவதால், பாதுகாப்பு வழங்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம், 

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சந்து கடைகளில் மதுவிற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த சந்து கடைகளை போலீசார் அகற்றிவிட்டு அங்கிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சந்து கடை நடத்தியவர்கள் தங்களை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து அவர்களில் சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட மேலாளர் சண்முகவள்ளியை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் இதுகுறித்து கூறும் போது, ‘சந்து கடைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதால் அதை அகற்ற கோரி நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். இதையடுத்து அந்த சந்து கடைகளை போலீசார் அகற்றி நடவடிக்கை எடுத்தனர். இந்தநிலையில் சந்து கடைகளை நடத்தி வந்தவர்கள் சிலர், சந்து கடையை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்‘ என்றனர்.

Next Story