திருமங்கலம், சிவகங்கை, காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றும் 3 அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?


திருமங்கலம், சிவகங்கை, காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றும் 3 அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?
x
தினத்தந்தி 13 Feb 2019 4:01 AM IST (Updated: 13 Feb 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம், சிவகங்கை, காரைக்குடி ஆகிய ஊர்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றும் 3 அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியானது.

மதுரை,

கனரக வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக பேட்ஜ் லைசென்ஸ் பெற்றதால் தான் அந்த வாகனத்தை ஓட்ட முடியும். அந்த லைசென்ஸ் எடுப்பதற்கு கண்டிப்பாக 8–ம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும். அவ்வாறு படிக்காதவர்கள் போலியாக பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து லைசென்ஸ் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இவ்வாறு லைசென்ஸ் பெறுபவர்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலமாகத்தான் லைசென்ஸ் வாங்கி வருவதாகவும், அவர்கள் தான் போலி சான்றிதழ்களை வாங்கி கொடுப்பதாகவும் தகவல் வெளியானது.

இதில் மதுரை வடக்கு வட்டார அலுவலகத்தில் அதிக ஊழல் நடைபெற்று உள்ளதாக மதுரையை சேர்ந்த செந்தில்கண்ணன் என்பவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2015, 2016–ம் ஆண்டுகளில் 6 ஆயிரத்து 777 பேருக்கு பேட்ஜ் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் பலருக்கு போலியான மாற்றுச்சான்றிதழ், பள்ளிச்சான்றிதழ்களை பெற்று கொண்டு லைசென்ஸ் வழங்கி உள்ளனர். இதற்காக லைலென்ஸ் பெற்ற ஒவ்வொருவரும் ரூ.15 முதல் ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் கொடுத்துள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் என அனைவரும் பிரித்துக் கொண்டனர். இவ்வாறு அவர்கள் மொத்தம் 10 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் புகார் தெரிவித்த காலக்கட்டத்தில் 712 பேரின் சான்றிதழ்களை ஆய்வு செய்யாமல் பேட்ஜ் லைசென்ஸ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரியாக இருந்த கல்யாண்குமார், வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பூர்ணலதா, முருகன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தனியார் பள்ளி முதல்வர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட 17 பேர் மீது லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், போலி ஆவணம் தயாரித்தல், போலி முத்திரை தயாரித்தல், தெரிந்தே தவறான ஆவணங்கள் தயாரித்தல், சதித்திட்டம் தீட்டுதல் என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் திருப்பாலை தனியார் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி கல்யாண்குமார் மற்றும் சர்வேயர்காலனி–மாட்டுத்தாவணி ரோட்டில் வசிக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா மற்றும் மாட்டுத்தாவணி பகுதியில் வசிக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகன் ஆகியோர் வீடுகளில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஒரே நேரத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களது சொத்து ஆவணங்கள், நகைகள் உள்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அவர்களிடம் விசாரித்தனர். இதன் மூலம் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

கல்யாணகுமார் தற்போது சிவகங்கை வட்டார போக்குவரத்து அதிகாரியாகவும், பூர்ணலதா மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராகவும், முருகன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளராகவும் உள்ளனர்.

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story