மயானத்தில் உடலை எரிக்க எதிர்ப்பு: மூதாட்டி பிணத்துடன் 4 வழிச்சாலையில் உறவினர்கள் மறியல்
திருமங்கலம் அருகே மயானத்தில் உடலை எரிக்கவிடாததால் மூதாட்டி பிணத்துடன் உறவினர்கள் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்,
கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது, நல்லமநாயக்கன்பட்டி. இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் மயானம் இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கண்மாய் பகுதிகளில் பிணத்தை எரித்து வந்துள்ளனர். ஆதிதிராவிடர் காலனியில் மயானம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து நல்லமநாயக்கன்பட்டி கண்மாய் பகுதியில் மயானம் அமைத்து தருவதாக வாய்வழியாக உத்தரவு வழங்கப்பட்டது. அதுவரை அப்பகுதியில் பிணத்தை எரிக்கலாம் என்றும் கூறினர்.
இந்தநிலையில் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மாரியப்பன் மனைவி அன்னக்கிளி என்ற கிருஷ்ணம்மாள் (வயது 70) என்பவர் நேற்று இறந்துபோனார். இதனைத்தொடர்ந்த அவரது பிணத்தை அடக்கம் செய்வதற்காக மயான பகுதிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது கண்மாய் அருகில் உள்ள நில உரிமையாளர்கள், எங்களது நிலங்கள் வழியாக பிணத்தை கொண்டு செல்லக்கூடாது, இப்பகுதியில் எரிக்கக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது 2 தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக உருவானது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதற்கிடையே மயானம் மற்றும் அங்கு செல்வதற்கு பாதை அமைக்கக்கோரி கிருஷ்ணம்மாளின் உறவினர்கள் பிணத்துடன் மதுரை–விருதுநகர் 4 வழிச்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியல் குறித்து தகவல் அறிந்த வந்த கள்ளிக்குடி தாசில்தார் ஆனந்தி, உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன், திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒரு தரப்பினர் சமாதானம் ஆகவில்லை. இருப்பினும் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவரிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
பின்னர் இறந்துபோன மூதாட்டியின் உடல் அரசு மயானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நல்லமநாயக்கன்பட்டி கண்மாய் பகுதியில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.