கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் எத்தனை பேர்? மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி
கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் எத்தனை பேர் என்று மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செபஸ்டின் பிரிட்டோ, அவினாஷ் உள்பட 4 பேரும் இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு தனியார் கப்பல் மூலம் எல்.பி.ஜி. கியாஸ் ஏற்றிச்சென்றனர். இவர்கள் தவிர பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் அந்த கப்பலில் பயணித்தனர். கடந்த மாதம் 21–ந்தேதி அந்த கப்பல் ரஷ்யா அருகே சென்ற போது கியாஸ் கசிவு ஏற்பட்டு, கப்பல் தீப்பிடித்தது. இதில் கப்பலில் இருந்தவர்கள் பலர் உயிர் தப்பினர். ஆனால் 4 இந்தியர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மாயமான அவர்களை மீட்கக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, 4 பேரை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை தலைவர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை பிறப்பித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
இந்திய கடற்பரப்பில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
கடற்பரப்பில் ஏற்படும் விபத்தில் ஏற்படும் காயம் மற்றும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்படி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதா? வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? நாடு வாரியாக வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? ஆண்டு வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும். அவர்களின் உடல்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதா? கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிற்கு திரும்ப இயலாமல் பிற நாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேருக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வெளிநாட்டு சிறைகளில் இருக்கும் இந்தியர்கள் எத்தனை பேர்?
வெளிநாடுகளில் தொழிலாளர்களாக செல்லும் இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன? வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு சட்ட உதவிகளை இந்திய அரசு வழங்குகிறதா? வெளிநாடுகளில் பணியாற்றும் பெண்கள் உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக புகார் எழுந்துள்ளநிலையில், அதுதொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை புகார்கள் பெறபட்டுள்ளது.
இது வரையில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் எத்தனை வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா?
இந்திய பணியாளர்கள் பலவேறு நாடுகளில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் புகார் அளிக்க சென்றால் மொழி பிரச்சினை ஏற்படுகிறதா? கடந்த 10 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் பணி புரியும் பணியாளர்களால் இந்தியாவிற்கு எவ்வளவு வருமானம் வந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுவதை தடுப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?
மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.