‘‘தமிழர் பண்பாடு விஷயத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்கத்தக்கதல்ல’’ ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகளை அறிவிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழர்களின் நாகரிகம், பண்பாட்டினை அறிவது முக்கியம், இந்த விஷயத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது–
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அங்கு பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதன் முடிவுகள் என்ன ஆனது? ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஏன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ‘‘தமிழர்களின் நாகரிகம், பண்பாடுகளை அறிவது முக்கியம். இந்த விஷயத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்கத்தக்கதல்ல. கீழடி அகழ்வாராய்ச்சியிலும் அதிகாரி இடம் மாற்றம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
குறிப்பிட்ட காலத்துக்குள் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகளை அறிவிக்க வேண்டும். மேலும், ஏரல் சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும்’’ என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 19–ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.