மானியத்தில் மாட்டுத்தீவனங்கள் வழங்கக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மானியத்தில் மாட்டுத்தீவனங்கள் வழங்கக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:20 AM IST (Updated: 13 Feb 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

மானியத்தில் மாட்டுத்தீவனங்கள் வழங்கக்கோரி மதுரை உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயிகள் பலரும் பயிர் சாகுபடி பணிகளை விட்டு, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனை நம்பியே தற்போது பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தவிடு, புண்ணாக்கு, வைக்கோல் உள்ளிட்ட மாட்டுத்தீவனம் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் மாட்டுத்தீவனங்களை முழு மானியத்தில் வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், மாட்டுத்தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். பிரதம பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆவின் மூலம் மதிப்பூதியம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது போன்று, விவசாயிகள் வழங்கும் பாலை கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும், மதுரை மாவட்ட மக்கள் பலரும் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடைகளை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். எனவே கால்நடைகளை வளர்ப்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெண்மணிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி, மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறவை மாடுகளுடன் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் சிலர் சாலையில் பாலை கொட்டி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Next Story