சிறுவனை கொலை செய்த வழக்கில் மெக்கானிக்குக்கு ஆயுள் தண்டனை


சிறுவனை கொலை செய்த வழக்கில் மெக்கானிக்குக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 13 Feb 2019 4:25 AM IST (Updated: 13 Feb 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே சிறுவனை கொலை செய்த வழக்கில் மெக்கானிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பத்தூர்,

ஜோலார்பேட்டை அருகே உள்ள டி.வீரப்பள்ளியை சேர்ந்தவர் சரவணன், ஆசிரியர். இவரது மகன் சத்தியமூர்த்தி, ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 1.4.2016 அன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு சத்தியமூர்த்தி மொபட்டில் புறப்பட்டார்.

அப்போது குடியானகுப்பத்தை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் முருகன் மற்றும் ஒரு சிறுவன், சத்தியமூர்த்தியின் மொபட்டை மறித்து நிறுத்தினர். பின்னர் சத்தியமூர்த்தியிடம் மொபட்டை பறிக்க முயன்றனர். ஆனால் சத்தியமூர்த்தி தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் சத்தியமூர்த்தியை அடித்து உதைத்து, கொலை செய்து அருகில் உள்ள ஏரியில் பிணத்தை தூக்கி வீசினார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரா.ரமேஷ் ஆஜரானார். நேற்று நீதிபதி டி.இந்திராணி வழக்கை விசாரித்து, முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அதைத்தொடர்ந்து முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story