சட்டத்தின் வழி நடப்பதே போலீசாரின் கடமை கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
சட்டத்தின் வழி நடப்பதே போலீசாரின் கடமை என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தி வரும் கவர்னர் கிரண்பெடி நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அபூர்வா குப்தா, ராகுல் அல்வால் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.
அப்போது சட்டத்தின் வழி நடப்பதே போலீசாரின் கடமை என்று தெரிவித்தார். மேலை நாடுகளில் சட்டத்தின் வழியில் போக்குவரத்து, வாகனம் ஓட்டுவது, வாகனங்களை நிறுத்தி வைப்பது நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார். காவல்துறை பொதுமக்கள் எளிதாக அணுகும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
காவல்துறையினரின் பணி விவரங்கள் குறித்து கம்ப்யூட்டர் மயமாக்க கேட்டுக்கொண்டார். தேசிய தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து பணியாளர் நிர்வாக மென்பொருளை மேம்படுத்தவும், ஒரு பட்டனை அழுத்தினாலே அதிகாரிகள், போலீசார் குறித்த அனைத்து விவரங்களும், குறிப்பாக பதவி, பணியிடமாற்றம், கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அறியும் விதத்தில் வைத்திருக்கவேண்டும் என்றார்.
போலீஸ் பணிக்கு வயது வரம்பினை தளத்துவது குறித்த முடிவுகளை விரைவாக தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொள்வது தொடர்பாகவும், தமிழகத்தைப்போன்று நிலையாணை, காவல்நிலைய மேலாண்மை, ஆய்வு நடத்துவது குறித்து போலீஸ் கையேடு வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.