கவர்னர் கிரண்பெடி மக்களை துன்புறுத்தி ரசிக்கிறார் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
புதுவை கவர்னர் கிரண்பெடி மக்களை துன்புறுத்தி ரசிக்கிறார் என்று சிவா எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் கடந்த 2½ ஆண்டு காலமாக எதுபோன்ற நிலை உள்ளது? என்பது அனைவருக்கும் தெரியும். புதுவையில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா? கவர்னர் ஆட்சியா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கவர்னர் ஆட்சி நடப்பதுபோன்ற நிலையில்தான் அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உடனடியாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று கூறி மக்களின் மனநிலையை அறியாமலும், காலக்கெடு கொடுக்காமலும் அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர். கட்டாய ஹெல்மெட் அறிவிப்பு வெளியானவுடன் முதல்–அமைச்சரிடம் நான் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பேசினேன்.
அவரும் போலீஸ் டி.ஜி.பி., போக்குவரத்து செயலாளரிடம் பேசிவிட்டேன் என்று கூறினார். ஆனால் அவர்கள் முதல்–அமைச்சர் சொன்னதை கேட்கவில்லை. ரோட்டில் நின்றுகொண்டு மோட்டார்சைக்கிள்களின் நம்பர்களை குறித்துக்கொண்டு உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்னர் உத்தரவின்பேரில் ஆர்சி.புக், இன்சூரன்சு, டிரைவிங் லைசென்சு என்ற அபராதம் விதித்தார்கள். நாளொன்றுக்கு 1000 பேர் விதம் ஒரு மாதத்தில் 30 ஆயிரம் பேரை அரசுக்கு எதிராக கவர்னர் திசை திருப்பி வருகிறார். கோரிமேட்டில் இருந்து ஒருவர் நகரப்பகுதிக்கு வந்தால் அவரை 6 இடத்தில் மடக்கி ரெக்கார்டுகளை காட்ட கூறினார்கள். தற்போது சிக்னல்தோறும் மக்களை மிரட்டி துன்புறுத்துகிறார்கள்.
நகரப்பகுதி 3 கி.மீ. அளவுக்கே உள்ள புதுச்சேரியில் கீரை, பால், பூங்கா ஹெல்மெட் அணிந்துகொண்டே செல்வது சாத்தியமில்லை. கட்டாய ஹெல்மெட்டை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக அமல்படுத்தலாம். மக்கள் துன்புறுத்தப்படுவதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறானது.
இந்த மாநிலத்தில் குறைந்தபட்ச கூலி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா? அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பது சரியா? அரசுத்துறை நிறுவனங்களின் நஷ்டங்கள் குறித்து இந்த கவர்னர் எப்போதாவது ஆய்வு செய்தது உண்டா? அதுபோன்ற நிர்வாகத்தில் கை வைக்காமல் மக்களை துன்புறுத்தி ரசிக்கிறார். இது சைக்கோ விளையாட்டுபோல் உள்ளது.
தி.மு.க.வானது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் மக்கள் கஷ்டத்தை சொல்லாமல் இருக்கமுடியாது. காவல்துறையினர் கடந்த 4 மாதமாக விதித்து வரும் அபராதத்தால் புதுவை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாவை நம்பி உள்ள நமது மாநிலத்துக்கு இது நல்லதல்ல.
முதல்–அமைச்சர் நாராயணசாமி மக்கள் அவருக்கு கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் அவரது அதிகாரம் வேறொருவரிடம் உள்ளது. தற்போது மக்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வரும் நிலை உள்ளது. தற்போது காவல்துறை மக்கள் மீது போடும் வழக்கில் மக்களுக்கு ஆதரவாக தி.மு.க. நிற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தி.மு.க. வழக்கறிஞர் அணி உதவிகரமாக செயல்படும்.
மோட்டார்சைக்கிளில் வந்து அபராதம் விதிக்கப்படுபவர்கள் எல்லாம் பெரிய பணக்காரர்கள் அல்ல. ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதே நிலை தொடருமானால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தற்போது ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ்பெற வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கூறினார்.