ரூ.1 கோடி சிகரெட் பண்டல்களுக்காக டிரைவர்களை தாக்கி 2 லாரிகள் கடத்தல்


ரூ.1 கோடி சிகரெட் பண்டல்களுக்காக டிரைவர்களை தாக்கி 2 லாரிகள் கடத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 11:21 PM GMT)

ரூ.1 கோடி சிகரெட் பண்டல்களுக்காக டிரைவர்களை தாக்கி 2 லாரிகளை வடமாநில கும்பல் கடத்தி சென்றனர். லாரியில் சிகரெட் இல்லாததால் அதனை விட்டுவிட்டு அவர்கள் தப்பி சென்று விட்டனர். பரபரப்பான இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனப்பாக்கம்,

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50), மணப்பாறையை சேர்ந்தவர் கண்ணதாசன் (30), லாரி டிரைவர்களான இவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள சிகரெட் பண்டல்களை 2 லாரிகளில் ஏற்றிக்கொண்டு ஓசூருக்கு சென்றனர். ஓசூரில் சிகரெட் பண்டல்களை இறக்கிவிட்டு காலி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு குண்டூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை 2 பேரும் லாரியை நிறுத்தி, டீ சாப்பிட்டுவிட்டு மீண்டும் புறப்பட்டனர். அவர்கள் ஆம்பூர் அருகே இரவு 8 மணி அளவில் வந்தபோது கண்ணதாசன் ஓட்டி வந்த லாரியின் முன்பு ஒரு லாரியும், பின்புறம் ஒரு லாரியும் திடீரென வந்து மடக்கினர்.

பின்னர் 6 பேர் கொண்ட வடமாநில கும்பல் கண்ணதாசனின் லாரியில் ஏறி அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் லாரியிலேயே அவரை கட்டிபோட்டுவிட்டு அவர்கள் லாரியை ஓட்டிச் சென்றனர். மேலும் கண்ணதாசனிடம் இருந்து ரூ.4 ஆயிரத்தை பறித்து கொண்டனர்.

அதேபோல் பள்ளிகொண்டா அருகே செல்வகுமார் ஓட்டி வந்த லாரியையும் அவர்கள் மடக்கினர். பின்னர் செல்வகுமாரையயும் தாக்கி, கட்டிப் போட்டனர்.

சிறிதுதூரம் சென்றபின்னர் 2 லாரிகளையும் மர்ம கும்பல் நிறுத்திவிட்டு லாரியில் இருந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்தனர். அதில் சிகரெட் இல்லாமல் காலியாக இருந்தது. இதுகுறித்து செல்வகுமார், கண்ணதாசனிடம் கேட்டபோது அவர்கள் ஓசூரில் இறக்கிவிட்டு வந்ததாக தெரிவித்தனர்.

இதனால் ஏமாற்றமடைந்த மர்ம கும்பல் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் நேரத்தை கடத்திவிட்டு சென்னை நோக்கி லாரிகளை ஓட்டி வந்தனர். வாலாஜாவை அடுத்த சுமைதாங்கி என்ற இடத்தில் கண்ணதாசனை லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டனர். இதையடுத்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அவர் ஓட்டி வந்த லாரியை நிறுத்திவிட்டு சென்றனர். அதேபோல் செல்வகுமாரை ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே கீழே தள்ளிவிட்டு சிறிது தூரத்தில் அந்த லாரியையும் விட்டுவிட்டு மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் ஓச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு படுகாயம் அடைந்த செல்வகுமாரை பார்த்து விசாரித்தபோது நடந்தவற்றை அவர் கூறினார். பின்னர் கண்ணதாசனையும் தொடர்பு கொண்டபோது தான் சுமைதாங்கியில் இருப்பதாக கூறினார். இதையடுத்து காவேரிப்பாக்கம் போலீசார் 2 பேரையும் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் வடமாநில கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

ரூ.1 கோடி மதிப்புள்ள சிகரெட் பண்டல்களை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல், சிகரெட் இல்லாததால் லாரியை கடத்திசென்று டிரைவர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story