கார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘கிராஷ் டெஸ்ட்’ சோதனை
கார்களுக்கு ‘கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் மோதல் சோதனை நடத்தப்படுகிறது.
தங்களின் கண்டுபிடிப்பு விண்ணில் நிச்சயம் பறக்கும் என்பதை நிரூபித்தவர்கள் ரைட் சகோதரர்கள். நாள் கணக்கில் இருந்த பயணத்தை மணிக் கணக்கில் குறைத்தது விமான பயணம்தான். ஆனால் விமானத்தை நம்பும் நமது அறிவியல் மனம் அத்துடன் கூடுதலான பாராசூட் கண்டுபிடிப்பாளரையும் பாராட்டத்தானே விழைகிறது. பாராசூட் இல்லாத விமானத்தில் எவராவது பயணிக்க முன்வருவார்களா. அதைப்போல பயண நேரத்தை சவுகரியமாக்கியதில் கார்களின் பங்கு மிக அதிகம். அத்தகைய கார்கள் பத்திரமானவைதான் என்பதை யாராவது சான்று அளித்தால்தானே நம்பிக்கை வரும். அதற்குத்தான் ‘கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் மோதல் சோதனை நடத்தப்படுகிறது. கார்கள் விபத்தை சந்திக்க நேர்ந்தால் பயணிகளுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளன என்பதை இந்த மோதல் சோதனைகள் உறுதி செய்கின்றன. சோதனைகளின் முடிவில் இவற்றுக்கு நட்சத்திர குறியீடு அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கார்களைத் தேர்வு செய்யலாம். இனி மோதல் சோதனை குறித்து பார்க்கலாம்.
சோதனைகளை நடத்துவது யார்?
இதுபோன்ற கிராஷ் டெஸ்ட்களை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்கள் உள்ளன. ஆஸ்திரேலிஆசியன் நியூகார் அசெஸ்மென்ட் திட்டம் (ஏ.என்.சி.ஏ.பி.), ஆட்டோ நியூகார் அசெஸ்மென்ட் திட்டம் (ஏ.ஆர்.சி.ஏ.பி.), சீனா நியூகார் அசெஸ்மென்ட் திட்டம் (சி.என்.சி.ஏ.பி.), ஐரோப்பிய நியூகார் அசெஸ்மென்ட் திட்டம் (யூரோ என்.சி.ஏ.பி.), அல்ஜீம்னியர் டாயிஷர் ஆட்டோமொபில்கிளப் (ஏ.டி.ஏ.சி.), ஜெர்மனி, ஜப்பான் நியூகார் அசெஸ்மென்ட் திட்டம் (ஜே.என்.சி.ஏ.பி.), லத்தீன் நியூகார் அசெஸ்மென்ட் திட்டம் (லத்தீன் என்.சி.ஏ.பி.), லத்தீன் அமெரிக்கா, தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு நிர்வாகம் (என்.ஹெச்.டி.எஸ்.ஏ.), அமெரிக்கா, பெடரல் மோட்டார் வெகிக்கிள்ஸ் பாதுகாப்பு தர அமைப்பு (எப்.எம்.வி.எஸ்.எஸ்.), நியூகார் அசெஸ்மென்ட் திட்டம் (என்.சி.ஏ.பி.), இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் பார் ஹைவே சேப்டி அமெரிக்கா உள்ளிட்ட அமைப்புகள் கார்களுக்கான பாதுகாப்பு சோதனைகளை நடத்துகின்றன.
பயணிகளுக்கு பதிலாக
கார்களில் பயணிகளுக்குப் பதிலாக மனித உருவிலானபொம்மைகள் (டம்மி) பயன்படுத்தப்படும். மனித உருவில் மட்டுமின்றி மனிதனின் சதைப் பகுதி, எலும்பு, உடலின் பிற பாகங்கள், தலைப் பகுதி என அனைத்தும் அசல் மனித உறுப்புகளைப் போலவே இருக்கும். இதனால் வாகன சோதனையின்போது இந்த பொம்மைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அளவிட்டு அதன் அடிப்படையில் வாகனத்தின் பத்திரத்தன்மை உறுதி செய்யப்படும்.
வேகம்
சோதனை நடத்துவதற்காக கார்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயக்கப்படும். பெரும்பாலும் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கார்கள் இயக்கப்பட்டு மோதல் சோதனைக்கு உள்ளாக்கப்படும்.
முன்புற சோதனை
பொதுவாக முன்பக்கத்தில் சோதனை நடத்தப்படும். மிகவும் உறுதியான கான்கிரீட் சுவர்மீது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் கார் வந்து மோதினால் அது எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது சோதிக்கப்படும். இத்தகைய மோதலின் போது காரினுள் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் சோதிக்கப்படும். வழக்கமான கார்களுக்கு ஒரு விதமாகவும், எஸ்.யு.வி. கார்களுக்கு ஒரு விதமாகவும் இந்த சோதனை நடத்தப்படும். அதாவது கார்களின் உயரத்துக்கேற்ப முன்புற மோதல் நிகழ்வு பொருள் மாறுபடும்.
ஓவர்லாப் சோதனை
பக்கவாட்டில் மோதல் ஏற்பட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும். அது எந்த அளவுக்கு வாகனம் தாக்குப்பிடிக்கிறது என்பதற்கான சோதனை இது.
உருளும் சோதனை
கார் உருண்டு விபத்தை சந்திக்க நேர்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது இதில் சோதிக்கப்படும். காரின் கதவுகள், மேல் பகுதியை இணைக்கும் தூண்கள் எந்த அளவுக்கு ஸ்திரமாக உள்ளன என்பது இதில் தெரிந்துவிடும்.
சாலைகளில் உள்ள பொருள்கள்
வழக்கமான சாலைகளில் காணப்படும் பொருள்கள் நிறைந்த பகுதியில் மோதல் நிகழ்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் சோதிக்கப்படும்.
முக்கிய அம்சங்கள்
விபத்து ஏற்படும்போது தலையில் எந்த அளவுக்கு காயம் ஏற்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்படும். அடுத்து மார்பு பகுதியில் எந்த அளவுக்கு விபத்தின் பாதிப்பு இருக்கிறது என்பது சோதிக்கப்படும். கால் மற்றும் தொடைப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் ஆராயப்படும்.
செலவு எவ்வளவு
பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கார்கள் பத்திரமானவை என்பதை உறுதி செய்ய இத்தகைய சோதனை நிறுவனங்களிடமிருந்து நட்சத்திர குறியீட்டைப் பெறுவதற்காக இத்தகைய சோதனைக்கு செலவு செய்கின்றன. அதற்குரிய மனித பொம்மைகளை உருவாக்கி ஒரு சோதனை நடத்துவதற்கு மட்டும் 1.25 லட்சம் டாலர் செலவாகிறது. முகப்பு அல்லது பக்கவாட்டு சோதனை நடத்த 1 லட்சம் டாலர் செலவு ஆகும்.
போக்ஸ்வேகன் போலோ, டொயோட்டா எடியோஸ், டாடா ஜெஸ்ட் ஆகிய கார்களே இத்தகைய சோதனையில் நட்சத்திரக் குறியீட்டைப் பெற்றிருக்கின்றன. இனிவரும் காலங்களில் பாதுகாப்பான வாகனம் என்பதற்குரிய சான்று பெற்றால் மட்டுமே அவற்றை சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படும் என்ற விதிமுறைகள் படிப்படியாக கட்டாயமாக்கப்படலாம். கிராஷ் டெஸ்ட் சோதனையில் வெற்றி பெற்ற கார்களில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்ற நிலை உருவாகிவிடும்.
Related Tags :
Next Story