புதிய மாற்றங்களுடன் ‘ரெனால்ட் க்விட்’
ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் தயாரிப்புகள் மிகவும் பிரபலம். ஹேட்ச் பேக் மாடலில் விலை குறைவாக இருப்பதால் நடுத்தர பிரிவு மக்களின் தேர்வாக இது திகழ்கிறது.
தற்போது பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு விலையில் எவ்வித மாற்றமுமின்றி அறிமுகமாகியுள்ளது. இதில் இன்போடெயின்மென்ட் பகுதி முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.
7 அங்குல தொடு திரை, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிடி ஆகியவை இதன் சிறப்பம்சமாகும். இதில் கூடுதல் வசதியாக வீடியோ பிளேபேக் வசதியும் யு.எஸ்.பி. மூலம் மேற்கொள்ள முடியும். அத்துடன் குரலை அடையாளம் கண்டு தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இதிலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. டிரைவருக்கு ஏர்பேக், ஏ.பி.எஸ். வசதி மற்றும் இ.பி.டி. ஆகியனவும் உள்ளன.
பயணிகள் சீட்பெல்ட் அணிவதை அறிவுறுத்தும் சீட் பெல்ட் ரிமைண்டரும் இதில் கூடுதல் வசதியாக சேர்க்கப்பட்டுள்ளது. என்ஜினைப் பொறுத்தமட்டில் இதில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. இது 54 ஹெச்.பி., 0.8 லிட்டர் என்ஜின் அல்லது 68 ஹெச்.பி., 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். 5 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. இது தவிர 1 லிட்டர் என்ஜின் காரில் மட்டும் ஏ.எம்.டி. (ஆட்டோ மேனுவல் கியர் டிரான்ஸ்மிஷன்) வசதி உள்ளது.
ரெனால்ட் க்விட் மாடல் காரானது மாருதி ஆல்டோ, டட்சன் ரெடி-கோ ஆகியவற்றுக்குப் போட்டியாக விளங்குகிறது. மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் போட்டி நிறுவனங்களும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தை ரெனால்ட் உருவாக்கி உள்ளது.
Related Tags :
Next Story