தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள் விவசாயிகள் கவலை
தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை காட்டு யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்திற்குள் 10 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அவைகள் அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்று முட்டைக்கோஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன.
பின்னர் அவைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. யானைகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்தனர். இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story