கொதிகலன் குழாயில் பழுது வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் 1,310 மெகா வாட் மின்உற்பத்தி பாதிப்பு மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


கொதிகலன் குழாயில் பழுது வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் 1,310 மெகா வாட் மின்உற்பத்தி பாதிப்பு மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 14 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின்நிலையங்களில் 1,310 மெகா வாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மின்தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகா வாட் வீதம் 630 மெகா வாட் மின்சாரமும், 2–வது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகா வாட் வீதம் ஆயிரத்து 200 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டதால் முதல் யூனிட்டில் உள்ள முதல் அலகில் 210 மெகா வாட்டும், 2–வது யூனிட் முதல் அலகில் 600 மெகா வாட்டும் என மொத்தம் 810 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மீஞ்சூர் அருகே வல்லூர் கிராமத்தில் மத்திய எரிசக்தி துறை மற்றும் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள 3 யூனிட்டுகளிலும் தலா 500 மெகா வாட் வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதால் முதல் யூனிட்டில் 500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

2 அனல்மின்நிலையங்களிலும் மொத்தம் 1,310 மெகா வாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால், மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே பணிகளை விரைந்து முடித்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்க பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story