வால்பாறை பகுதியில் தடை போட்டும் விடை பெறாத பிளாஸ்டிக்
வால்பாறை பகுதியில் தடை போட்டும் முற்றிலும் விடை பெறாத பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. இதனால் வனவிலங்குகளின் வாழ்வியல் பாதிப்படைவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வால்பாறை,
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. இது குறித்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்புகளும், விழிப்புணர்வு பேரணிகளும் நடைபெற்றன. துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மூலம் கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டும் எச்சரிக்கை செய்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதலும் செய்யப்பட்டன.
வனத்துறை சார்பிலும் ஆழியார், அட்டகட்டி, உருளிக்கல், மளுக்கப்பாறை அகிய இடங்களில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி மூலம் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் மூலமாகவும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதியில் தடை போட்டும் விடைபெறாத நிலையில் தான் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. அவைகள் முற்றிலும் ஒழிக்கப்படாத நிலையில் இருந்து வருகிறது. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-
வால்பாறை பகுதியில் உள்ள கடைகள் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுவதற்கு சிறிய வாகனங்களிலும், வேன்களிலும் கொண்டு வரும் பொருட்களும், அவைகளை பேக்கிங் செய்து வருகின்ற பொருட்களும் பிளாஸ்டிக் பைகளில்தான் வந்து கொண்டு வரப்படுகின்றன. மேலும் அரசு விதித்துள்ள பயன்படுத்தக்கூடிய அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் எவை? என்பதும் அவைகளை எப்படி கண்டறிவது என்பதும் கடைக்காரர்களுக்கு தெரியாத நிலையே இருந்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து கடைக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டு தான் வருகின்றார்கள். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்து கேரி பேக் என்று சொல்லக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர சாப்பாடு பார்சல் செய்வதற்கு பயன்படும் பிளாஸ்டிக் பேப்பர்களின் பயன்பாடுகள் குறைந்த பாடில்லை.
இதனால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாபயணிகள் உணவு பொட்டலங்களுக்கு கட்டிவரும் பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் கூடுகளை உணவு சாப்பிட்டதும், சாலை ஒரங்களில் வீசி எறிந்து விட்டுத்தான் செல்கின்றார்கள். இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைப்பணிகள் செய்வதற்கு, மண்ணை வெட்டி எடுக்கும் போது பல மாதங்களான பிளாஸ்டிக் பைகள் மக்கிப் போகாத நிலையில் வெளியே வருகின்றன.
இதனால் வால்பாறை பகுதியில் உள்ள வனவிலங்குகளின் வாழ்வியல் பாதிக்கப்பட்டு வருகிறது. வால்பாறை- பொள்ளாச்சி சாலையின் ஓரங்களில் சுற்றித்திரியும் குரங்குகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு அதன் உணவுப்பழக்கங்களில் மாறுதல் ஏற்பட்டதோடு நோய்கள் தாக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வால்பாறை பகுதியில் வாழ்ந்து வரக்கூடிய சிங்கவால் குரங்குகள் அழியும் நிலை உள்ளது. இதற்காக வனத்துறையினரும், வனவிலங்கு ஆர்வலர்களும், உலகம் முழுவதுமுள்ள வன விலங்கு ஆராய்ச்சியாளர்களும் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்திய போதிலும், அவைகளை அழிந்து வரும் விலங்கின பட்டியலில் இருந்து மீட்டெடுக்க முடியாத நிலையே உள்ளது.எனவே வால்பாறை நகராட்சி நிர்வாகம், வனத்துறையினர், சுகாதாரத் துறையினர், இயற்க்கை ஆர்வலர்கள் இணைந்து வால்பாறை பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும், எந்த அளவிலான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவேண்டும் என்ற தெளிவையும் பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடமிருந்து வீடுகளுக்கே சென்று குப்பைகளை பிரித்து வாங்கி அப்புறப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story