மாவட்ட செய்திகள்

நிலமோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை + "||" + In the case of nilamocati 3 year jail for 3 members of the same family

நிலமோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

நிலமோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
நிலமோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறையும், நிலத்தை வாங்கியவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை,

கோவையை சேர்ந்த கணபதி கவுண்டர், அவருடைய மகன்கள் பிரகாசம், காளிமுத்து, மகள் வசந்தாமணி ஆகியோர் சேர்ந்து காளப்பட்டியில் உள்ள தங்களது 5 சென்ட் நிலத்தை சோமசுந்தரம் என்பவருக்கு கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி விற்பனை செய்தார்கள்.

இந்த நிலையில் சோமசுந்தரத்துக்கு கடந்த 2004-ம் ஆண்டில் திடீரென்று பக்கவாத நோய் ஏற் பட்டது. இதனால் அவரால் வெளியே செல்லமுடியவில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய கணபதி கவுண்டர் உள்பட 4 பேரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து தாமோதரன் என்பவருக்கு மீண்டும் அந்த நிலத்தை விற்றனர்.

இதை அறிந்த சோமசுந்தரம் தனது வக்கீல் மூலம் இது குறித்து கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததால் தனக்கு ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இந்த வழக்கு நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணத்தை உண்மையான ஆவணம் என்று கூறி ஏமாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளில் கணபதி கவுண்டர், பிரகாசம், காளிமுத்து, வசந்தாமணி மற்றும் நிலத்தை வாங்கிய தாமோதரன் ஆகியோர் மீது விசாரணை நடந்தது.

இதற்கிடையே கணபதி கவுண்டர் இறந்து விட்டதால் அவரது பெயர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது. மற்ற 4 பேர் மீதும் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு என்.ஞானசம்பந்தம், மோசடி வழக்கில் பிரகாசம் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், தாமோதரனுக்கு ஒரு ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், போலி ஆவணம் தயாரித்த பிரிவுக்கு 3 பேருக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், தாமோதரனுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.1000 அபராதமும், போலி ஆவணத்தை உண்மையானது என்று ஏமாற்றியதற்கு 3 பேருக்கு ஒரு ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், தாமோதரனுக்கு ஒரு ஆண்டு சிறை, ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை அவர்கள் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், நிலத்திற்கான தொகை ரூ.10 லட்சத்தை 3 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

இது குறித்து வக்கீல்கள் கூறியதாவது:-

பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கும்போது ஏக காலம் என்று குறிப்பிடப்படும். அதில் எது அதிக தண்டனை இருக்கிறதோ அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். அதன்படி இந்த வழக்கில் 3 பேருக்கு 3 பிரிவில் தலா 3 ஆண்டு, 2 ஆண்டு, ஒரு ஆண்டு என்றும் ஒருவருக்கு 3 பிரிவிலும் தலா ஒரு ஆண்டு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

எனவே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தலா 3 ஆண்டு சிறையும், நிலத்தை வாங்கிய தாமோதரன் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலமோசடி வழக்கு, கோர்ட்டு ஊழியர்களுக்கு ரூ.15 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டும்
நிலமோசடி வழக்கில் ரூ.15 லட்சத்தை கோர்ட்டு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.