தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிப்பு


தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 7:54 PM GMT)

வெளிநாட்டில் மகனுக்கும், உறவினர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கியவர் திருப்பி தராததால், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை தொழிலாளி பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நேற்று மாலை 5 மணியளவில் சுமார் 50 வயது உடையவர் கையில் பையுடன் நுழைந்தார். அந்த நபர் அலுவலக வளாகத்தின் வலது புறம் உள்ள பூங்கா பகுதிக்கு சென்று பையில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனால் தீயில் அவர் உடல் முழுவதும் கருகியது. தகவலறிந்த தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் ஆதார் அடையாள அட்டை ஒன்று இருந்தது.

அந்த அட்டையில் தேனி மாவட்டம், க.விலக்கு அன்னை இந்திரா நகரை சேர்ந்த முனியாண்டி (வயது 56) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து தீக்குளித்தவர் கூலித்தொழிலாளி முனியாண்டி என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவருடைய உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில், முனியாண்டி தனது மகன் பாலமுருகன், உறவினர்கள் கோவிந்தராஜன், அழகுராஜன் ஆகியோருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிய சென்னை அண்ணா நகரை சேர்ந்த பெண்ணிடம் ரூ.18 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுசம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முனியாண்டி மனு கொடுத்துள்ளார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு விசாரணைக்கு முனியாண்டி, தனது மகன் பாலமுருகன் மற்றும் உறவினர்களுடன் வந்துள்ளார். பின்னர் மகன், உறவினர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். அதன்பின்பு கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் முனியாண்டி சென்று தீக்குளித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முனியாண்டியிடம் ஆண்டிப்பட்டி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு மகேந்திரவர்மா நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story