கடத்தி செல்லப்பட்டதாக புகார்: கேபிள் ஆபரேட்டரை மீட்டு தரக்கோரி உறவினர்கள் தர்ணா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு
பரமத்தி அருகே கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் கேபிள் ஆபரேட்டரை மீட்டு தரக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள புலவர்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). கேபிள் ஆபரேட்டர். கடந்த 11-ந் தேதி சரவணனின் மனைவி சாந்தி பரமத்தி போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்து இருந்தார்.
அதில், தான் குஞ்சாம்பாளையம் காலனிக்கு மாமனார் வீட்டுக்கு சென்று திரும்பியபோது வீட்டில் இருந்த கணவர் சரவணனை காணவில்லை என கூறியிருந்தார். அதன்பேரில் பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடிவந்தனர்.
இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உறவினர்களுடன் மனு கொடுக்க சாந்தி வந்து இருந்தார். இவர்கள் திடீரென சரவணனை உடனடியாக மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமரசம் செய்த போலீசார், அதிகாரிகளிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.
அப்போது சாந்தி அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் கபிலர்மலையில் கேபிள் நிறுவனம் நடத்தி வருகிறார். என் கணவருக்கும் நாமக்கல்லில் கேபிள் நிறுவனம் நடத்தும் ஒருவருக்கும் கடந்த ஒருமாதமாக பிரச்சினை உள்ளது. இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி காலை 10 மணிக்கு நான் என் மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தபோது, எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோவில் அருகில் என் கணவர் சரவணன், எனது உறவினர் சேகர் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில், 3 பேர் காரில் வந்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் இருந்து வந்திருப்பதாகவும், இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு அழைத்துவர சொன்னார் எனவும் கூறி வலுக்கட்டாயமாக எனது கணவரை காரில் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த விவரத்தை எனது உறவினர் சேகர் என்னிடம் தெரிவித்தார். நானும் எங்கள் உறவினர்களும் பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்ததில் யாரும் இங்கிருந்து வந்து உங்கள் கணவரை அழைத்து வரவில்லை என தெரிவித்தனர். எனவே எனது கணவரை மீட்டு தரக்கோரி புகார் அளித்தேன். எனது கணவரின் செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 3 நாட்கள் ஆகியும் எனது கணவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து கடத்தி செல்லப்பட்ட எனது கணவரை மீட்டு தரவேண்டும். மேலும் கடத்திச்சென்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது மனு மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார். இந்த போராட்டத்தின்போது மூதாட்டி ஒருவர், வெயிலுக்கு மயங்கியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story