அய்யன்கொல்லியில், சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு சாவு
அய்யன்கொல்லியில் சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு உயிரிழந்தது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்டது அய்யன்கொல்லி. இங்குள்ள அம்பேத்கர் நகர், சீபுண்டி, தட்டாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் சிறுத்தைப்புலி வளர்ப்பு பிராணிகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவிட்டு மாலை நேரங்களில் பீதியுடன் வீடு திரும்பும் நிலை உள்ளது.
இந்த நிலையில் அய்யன்கொல்லி அம்பேத்கர் நகரில் ஜோனி என்பவர் பண்ணை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை நேற்று சீபுண்டி பகுதியில் அவர் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தைப்புலி ஒன்று அங்கு வந்தது. பின்னர் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாட்டை தாக்கி கொன்று, இறைச்சியை தின்றது. இதை பார்த்த ஜோனி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வனக்காவலர் தம்பகுமார் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் சிறுத்தைப்புலி தாக்கி உயிரிழந்த பசுமாட்டை பார்வையிட்டனர். தொடர்ந்து அய்யன்கொல்லி கால்நடை டாக்டர் நந்தினி வரவழைக்கப்பட்டு, பசுமாட்டின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. சிறுத்தைப்புலி அட்டகாசம் தொடர்ந்து வருவதால், அய்யன்கொல்லி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story