ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை
ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சேலம் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
சேலம்,
ராகு பகவான் நேற்று மதியம் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். அதே போல, கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்த ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சேலத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சேலம் தாதுபாய்குட்டை பகுதியில் உள்ள ஓம்சக்தி வேம்பரசர் விநாயகர் கோவிலில் காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், காலை 9.30 மணிக்கு சிறப்பு யாகமும் நடைபெற்றது. தொடர்ந்து நறுமண பொருட்களால் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
சேலம் பெரமனூரில் உள்ள கந்தசாமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நடந்த சிறப்பு பூஜையில் வெங்கடாசலபதிக்கு 64 மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பரிகார பூஜை நடைபெற்றது. மாலையில் 108 சங்கு பூஜை, கலசபூஜை உள்ளிட்டவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் அரிசிபாளையம் தெப்பக்குளம் அருகே சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கோவிலில் நவக்கிரகத்தில் உள்ள ராகு, கேதுவுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் அனைத்து நவகிரகங்களுக்கும் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது.
Related Tags :
Next Story