புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நாளை தொடங்குகிறது


புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 14 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 3-வது புத்தக திருவிழா புதுக்கோட்டையில் உள்ள டவுன்ஹாலில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதில் மாணவ, மாணவிகளுக்காக அறிவியல் விளையாட்டுகள், எங்கள் தேசம், மடிப்பு நுண்ணோக்கி அறிமுகம், அறிவியல் பரிசோதனைகள், வளர் இளம் பெண்களும்-சவால்களும், மந்திரமா தந்திரமா?, வாழ்வே அறிவியல், எது கல்வி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவின் தொடக்க விழா நாளை காலை 10 மணியளவில் நடக்கிறது.

புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் வீதம் என 2 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. மாலையில் தினமும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவையொட்டி நேற்று புத்தகங்கள் மற்றும் புத்தக திருவிழா குறித்த ஊர்வலம் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தொடங்கியது.

ஊர்வலத்தை புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி வழியாக சென்று டவுன்ஹாலில் நிறைவுபெற்றது. இதில் புத்தக திருவிழா வரவேற்புக்குழு தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி, செயலாளர் மணவாளன், ஒருங்கிணைப்பாளர் முத்துநிலவன், பொருளாளர் வீரமுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், டாக்டர் ராமதாஸ் உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் புத்தகங்களை ஏந்தியவாறு வந்தனர்.

புத்தக திருவிழாவை முன்னிட்டு கடந்த 2017-ல் வெளிவந்த சிறந்த புத்தகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் வேள்பாரி வெங்கடேசன் கலந்து கொண்டு விருதுகளை வழங்க உள்ளார். இந்த ஆண்டு முதல் புத்தக திருவிழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குறும்படங்களுக்கான விருது வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் மாரிசெல்வராஜ் இயக்கிய “பரியேறும் பெருமாள்“ சிறந்த திரைப்படமாகவும், கார்த்தி இயக்கிய “தொலைத்தொடர்பு“ சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. புத்தக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புத்தக திருவிழா வரவேற்புக்குழுவினர் மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் உள்பட பலர் செய்து வருகின்றனர். 

Next Story