மாவட்ட செய்திகள்

கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு + "||" + The government school foundation scandal broke with the villagers faced with the villagers protesting against the villagers

கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
கருங்கல் அருகே ஆனான்விளையில் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே கீழ்குளம் ஆனான்விளையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி கொடுத்த 14 சென்ட் இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 68 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இதற்கான அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக அச்சிடப்பட்ட சுவரொட்டியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பெயர் இடம் பெறாததால் அடிக்கல் நாட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பள்ளிக்கூடத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இன்னொருநாள் விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தையின் போது பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளே அடிக்கல் நாட்டிக் கொள்வது என்றும், அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும், அதனால் தான் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றதாகவும் மக்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆனான்விளை அரசு பள்ளிக்கூடத்தில் கூடுதல் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கில்ட்டஸ் மற்றும் கிராம மக்கள் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தனர். அதேநேரத்தில் அ.தி.மு.க.வினரும் அங்கு குவிந்திருந்தனர். அடிக்கல் நாட்டு விழாவை, பெற்றோர் ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சிந்துகுமார் நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் கூறினர்.

அரசு விழாவை அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம் தொடங்கி வைப்பார் என்று அ.தி.மு.க.வினரும் கூறினர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தரக்குறைவான வார்த்தைகளை பேசிக்கொண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் திடீரென கிராம மக்கள் விழாவின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றி பூமி பூஜை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுடைய மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் வந்த பிறகு தான், நிகழ்ச்சியை தொடங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே போலீசார், கிராம மக்களை சூழ்ந்து கொண்டு, ஜான்தங்கம்தான் அடிக்கல் நாட்டுவார். நீங்கள் அமைதியாக இருங்கள் என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென்று அடிக்கல் நாட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் அ.தி.மு.க.வினர் சிலர் இறங்கி நின்று கிராம மக்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளுக்கு எதிராக ஆவேசமாக எதிர்ப்பு குரல் எழுப்பினர். தொடர்ந்து கிராம மக்கள், அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே அங்கு அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் வந்தார். பின்னர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி ஜான்தங்கம் அடிக்கல் நாட்டினார். ஆனால் பொதுமக்களும், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடியே இருந்தனர். அடிக்கல் நாட்டிய சிறிது நேரத்தில் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து சென்று விட்டனர். எனினும் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த அடிக்கல் நாட்டு விழா சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கில்ட்டஸ் கூறுகையில், பள்ளிக்கூடத்துக்கு நிலம் வாங்குவதற்கு எந்தவொரு உதவியும் செய்யாத அரசியல்வாதிகளை வைத்து, அடிக்கல் நாட்டு விழாவை ஏன் நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் கேள்வி கேட்டனர். ஆனால் அ.தி.மு.க.வினர் எங்களுடைய எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் அடிக்கல் நாட்டி உள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. இது கண்டனத்துக்கு உரியது. எனது பணியை சிறப்பாக செய்ய முடியாததால் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய போகிறேன் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை