ஜோலார்பேட்டை அருகே நடைபயிற்சி சென்ற மயக்க மருந்து தடவி பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு தப்பி ஓடிய பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு


ஜோலார்பேட்டை அருகே நடைபயிற்சி சென்ற மயக்க மருந்து தடவி பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு தப்பி ஓடிய பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Feb 2019 10:00 PM GMT (Updated: 13 Feb 2019 9:07 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் மயக்க மருந்து தடவி 9 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராதாம்மாள் (வயது 55). இவர் தினமும் காலை, மாலை இருவேளையும் சாலையோரம் நடைபயிற்சி செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து வாணியம்பாடி - திருப்பத்தூர் மெயின்ரோட்டில் சந்தைகோடியூர் நோக்கி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையோரம் உள்ள புளியமரத்தின் அடியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புளியம்பழம் பொறுக்கி கொண்டிருந்தார்.

அந்த பெண் அவ்வழியாக வந்த ராதாம்மாளிடம், நீயும் புளியம்பழம் பொறுக்க வந்தாயா? என பேச்சு கொடுத்தார். மேலும் ராதாம்மாளை அந்த பெண்ணும் பின்தொடர்ந்து சென்று, மயக்க மருந்து கலந்த மையை உடலில் தடவினார். அதில் ராதாம்மாள் சுயநினைவை இழந்தார். பின்னர் ராதாம்மாளை சாலையோரம் மறைவான பகுதிக்கு அழைத்து சென்று, அவர் அணிந்திருந்த கம்பல், மோதிரம், தாலி சரடு, செயின் உள்ளிட்ட 9 பவுன் நகைகளை திருடிவிட்டு, முந்தானையில் மண்ணையும், கல்லையும் கட்டிவிட்டு அந்த பெண் மாயமானார்.

பின்னர் ½ மணி நேரம் கழித்து ராதாம்மாளுக்கு சுயநினைவு திரும்பியது. அப்போது, தான் அணிந்திருந்த நகை இல்லாததை கண்டு ராதாம்மாள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர். அவர்களிடம், ராதாம்மாள் நடந்த சம்பவத்தை எடுத்து கூறினார். பொதுமக்களும் நாலாபுறம் தேடிப் பார்த்தனர். ஆனால் அந்த பெண் கிடைக்கவில்லை.

இது குறித்து ராதாம்மாள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி, மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் மக்கள் கூட்டம் அதிகம் நடமாடும் மெயின்ரோட்டில் பெண்ணிடம் நூதன முறையில் நகையை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story