தில்லைநகரில் துணிகர சம்பவம்: கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


தில்லைநகரில் துணிகர சம்பவம்: கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 10:15 PM GMT (Updated: 13 Feb 2019 9:45 PM GMT)

திருச்சி தில்லைநகரில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி தில்லைநகர் வடுவூர் கீழத்தெரு 8-வது கிராசை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி மாதவி(வயது48). இவர், செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டவர். அதன்படி, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மாதவி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தில்லை நகர் 5-வது குறுக்குத் தெருவில் வந்தபோது, மாதவியை மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் பின் தொடர்ந்தனர்.

தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட ஆசாமிகள், திடீரென்று மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து மாதவி முன்பு நிறுத்தினர். பின்னர் கண் இமைக்கும் வேளையில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தில்லைநகர் போலீசில் மாதவி புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் கைவரிசை காட்டுவது குறைந்திருந்தது. தற்போது அவர்கள் மீண்டும் கைவரிசையை தொடங்கி இருக்கிறார்கள். எனவே, போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபடுவதுடன் அதிக அளவில் வாகன சோதனை நடத்திட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story