குதிரைபேர ஆடியோ குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு எதிர்ப்பு சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா
குதிரைபேர ஆடியோ குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 6-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் ெதாடங்கி நடைபெற்று வருகிறது.
சிறப்பு விசாரணை குழு
ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ. மகனுடன் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ உரையாடல் பதிவு வெளியாகி கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக சட்டசபையில் 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் தனது பெயர் இடம் பெற்றிருப்பதால், சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்துமாறு கர்நாடக அரசை சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.)விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார்.
பா.ஜனதா எதிர்ப்பு
இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சபை கூட்டுக்குழு அல்லது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது. சபாநாயகர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து சட்டசபை கட்சிகளின் தலைவர்களுடன் சமரச ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் நேற்று முன்தினம் இரவு அறிவித்து, சபையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 6-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று பகல் 12.30 மணிக்கு கூடியது.
கோழைகள் அல்ல
கூட்டம் தொடங்கியதும், பா.ஜனதா உறுப்பினர் மாதுசாமி எழுந்து பேசியதாவது:-
“உங்கள் (சபாநாயகர்) மீது நம்பிக்கை உள்ளது. நீங்கள் சொன்னதால் சமரச கூட்டத்தில் கலந்துகொண்டோம். சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டால், வழக்கு போடுவார்கள். அதை சந்திக்க எங்களுக்கு பயம் ஒன்றும் இல்லை. நாங்கள் கோழைகள் அல்ல. எல்லாவற்றையும் சந்திக்க தயாராக உள்ளோம். சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு நாங்கள் தயாராக இல்லை.
எங்களை சிறையில் தள்ளினாலும் பயப்படமாட்டோம். நாங்கள் பல்வேறு போராட்டங்களை சந்தித்து தான் இந்த சபைக்கு வந்துள்ளோம். சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது”.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.
மாநில அரசு பிடிவாதம்
அதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேசுகையில், “நீங்கள் சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தீர்கள். தாங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லது என்று சொன்னீர்கள். நாங்கள் இந்த சபையின் கூட்டுக்குழு அல்லது தற்ேபாது பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் அதை ஏற்க தயாராக இருக்கிறோம்.
ஆனால் மாநில அரசு, சிறப்பு விசாரணை குழு மூலம் தான் விசாரணை நடைபெற வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது. மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுபற்றி விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அரசு பிடிவாத போக்குடன் உள்ளது. இந்த சபை சுமுகமாக நடைபெறாமல் போனால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த அரசே அதற்கு காரணம். சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் பகல்-இரவாக இந்த சபையில் தர்ணா நடத்துவோம்” என்றார்.
தர்ணா போராட்டம்
அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகரின் பீடத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பா.ஜனதாவை அடக்கும் நோக்கத்தில் சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு இந்த அரசு முடிவு செய்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
சர்வாதிகார மனப்பான்மை
அப்போது பேசிய பா.ஜனதா உறுப்பினர் ஈசுவரப்பா, “இந்த அரசு சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுகிறது. பா.ஜனதாவுக்கு எதிராக சிறப்பு விசாரணை குழு விசாரணையை தவறாக பயன்படுத்த இந்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திரா காந்தி, நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதை போல் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் செயல்படுகிறார்கள்” என்றார்.
இதற்கு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
சித்தராமையா பேச்சு
இதனால் சபையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இந்த கடும் அமளிக்கு இடையே சித்தராமையா பேசியதாவது:-
ஆடியோ உரையாடல் விவகாரம் குறித்து இந்த சபையில் 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது. ஜனநாயகத்தின் முறைப்படி செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சபாநாயகர், கட்சி தலைவர்களின் சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். சபாநாயகரின் பேச்சுக்கு மதிப்பளித்து நாங்கள் அதில் பங்கேற்றோம்.
சபாநாயகரின் பெயரும்...
இந்த கூட்டத்தில் எங்களின் நிலையை மிக தெளிவாக கூறியுள்ளோம். சட்டப்படி அமைந்துள்ள இந்த கூட்டணி அரசை அகற்ற பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக குதிரை பேரத்தில் அக்கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த மோசமான செயல் காரணமாக எம்.எல்.ஏ.க்களை மக்கள் தவறாக பார்க்கிறார்கள். இந்த மோசமான செயல்களுக்கு ஒரு முடிைவ ஏற்படுத்த வேண்டும். சபாநாயகரின் பெயரும் இந்த பேரத்தில் இடம் பெற்றதால் தான் இந்த சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
உரிய தண்டனை
இந்த முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை. சிறப்பு விசாரணை குழு விசாரணை நடைபெற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். இனி கர்நாடகத்தில் இந்த குதிரை பேரம் போன்ற நிகழ்வு நடைபெறக்கூடாது.
இந்த உரையாடல் விவகாரம் ஊழல் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் நீதி விசாரணை அல்லது கூட்டுக்குழு விசாரணை நடைபெற்றால் உண்மை வெளியே வராது. ஜனநாயகத்தை காக்க வேண்டியது அவசியம். இந்த நோக்கத்தில் சிறப்பு விசாரணை குழு விசாரணை முடிவு சரியானதே.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
சமரச கூட்டம் தோல்வி
பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். இதையடுத்து சபையை மதியம் 3.30 மணிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
முன்னதாக சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் எடியூரப்பா பேசுகையில், ஆடியோ விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு முடிவை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதல்-மந்திரி மற்றும் சித்த ராமையா ஆகியோர், சிறப்பு விசாரணை குழு விசாரணை முடிவை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறக் கூடாது என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து இந்த சமரச கூட்டம் தோல்வியில் முடிந்தது.
மீண்டும் கடும் அமளி
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சபை மீண்டும் 4.15 மணிக்கு கூடியது. அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். உறுப்பினர் ஆர்.அசோக் பேசுகையில், “ஹாசனில் பா.ஜனதாவை சேர்ந்த பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ.வின் வீட்டின் மீது ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. முதல்-மந்திரி குமாரசாமியின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது” என்றார்.
அதைதொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர்கள் கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர். அத்துடன் முதல்-மந்திரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சபையில் கடும் அமளி தொடர்ந்ததை அடுத்து சபையை நாளைக்கு (அதாவது இன்று) சபாநாயகர் ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story