மாவட்ட செய்திகள்

கவர்னர்-முதல்வர் மோதல் உச்சக்கட்டம்: மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை; கவர்னர் மாளிகை முன்பு நாராயணசாமி தர்ணா + "||" + Governor-CM conflict Continuous stranglehold for the welfare of the people Narayanasamy Dharna before the Governor's House

கவர்னர்-முதல்வர் மோதல் உச்சக்கட்டம்: மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை; கவர்னர் மாளிகை முன்பு நாராயணசாமி தர்ணா

கவர்னர்-முதல்வர் மோதல் உச்சக்கட்டம்: மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை; கவர்னர் மாளிகை முன்பு நாராயணசாமி தர்ணா
மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,

புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப் படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பெடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.


இதனால் இலவச அரிசி, தீபாவளி பொருட்கள், பொங்கல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியவில்லை. இதற்கிடையே கவர்னர் கிரண்பெடி இலவச பொருட்களை அனைத்து தரப்பினருக்கும் தர முடியாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தர முடியும் என்று கூறி முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்களிடம் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் கவர்னர் கிரண்பெடி, 2 சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

மேலும் இருசக்கர வாகனத்தில் சிக்குபவர்களில் பலர் உயிரிழப்பதை தவிர்க்க கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின் பேரில் கடந்த 11-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வினரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் மாகி சென்றிருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை புதுவை திரும்பினார். அவர் சட்டசபை வளாகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சிலர் கருப்பு சட்டை, கருப்பு வேட்டி மற்றும் கருப்பு துண்டுகளை வாங்கி கொண்டு சட்டசபை வளாகத்திற்கு வந்தனர். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து வந்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் கருப்பு துண்டும், அமைச்சர் கமலக்கண்ணன் கருப்பு சட்டையும் அணிந்திருந்தனர்.

பின்னர் அவர்கள் மதியம் 1.30 மணியளவில் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர். பாலன், தீப்பாய்ந்தான், லட்சுமிநாராயணன், விஜயவேணி, தனவேலு, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோரும் கலந்து கொண்டனர். கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கவர்னர் மாளிகையை சுற்றி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் செய்தி காட்டுத்தீ போல பரவியது. எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கவர்னர் மாளிகை முன்பு குவியத் தொடங்கினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே தி.மு.க.வினர் பாரதிபூங்காவின் உள்ளே சென்று கவர்னர் மாளிகை எதிரே உள்ள கேட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் கவர்னரின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். இந்த நிலையில் மதியம் 2.45 மணிக்கு ஓட்டலில் இருந்து அவர்களுக்கு உணவு வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பரிமாறப்பட்டது. அவர்கள் கவர்னர் மாளிகை முன்பு நடுரோட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

இதற்கிடையே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கவர்னர் மாளிகை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கினர். அந்த பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள், “கவர்னரே வெளியே போ, மோடியே வெளியே போ. இது எங்கள் ஊர், எங்கள் மண், எங்களை ஆள நீ யார்?” என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும் போலீசாரின் தடுப்பை மீறி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல முயற்சி செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் தொண்டர்களை கட்டுப்படுத்துமாறு கூறினார். உடனே முதல்-அமைச்சர் நாராயணசாமி போராட்டம் நடத்திய இடத்தில் இருந்து எழுந்து கவர்னர் மாளிகை அருகே தடுப்பு அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். அவரை பார்த்த உடன் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அவர் தொண்டர்களிடம் போராட்டம் நடத்தி விட்டு அமைதியாக கலைந்து போகும்படி கூறினார். அதன் பின்னர் தொண்டர்கள் ஓரளவு கட்டுக்குள் வந்தனர்.

இதற்கிடையே மகளிர் காங்கிரஸ் கட்சியினர் திடீரென நூதன போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சங்கு ஊதியும், மேளம் அடித்த படியும் கவர்னர் மாளிகையை சுற்றி வந்து போராட்டம் நடத்தினர். மேலும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மகளிர் காங்கிரசார் கவர்னர் மாளிகையின் பின்புறம் சமையல் எரிவாயு அடுப்பு மூலம் உணவு சமைத்து அனைவருக்கும் பரிமாறினர். காப்பி போட்டு அனைவருக்கும் குடிக்க கொடுத்தனர்.

போராட்டகாரர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு வசதியாக கவர்னர் மாளிகை அருகில் நடமாடும் கழிப்பறை வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் போராட்டத்தின் காரணமாக நேற்று கவர்னர் மாளிகை போராட்ட களமாக மாறியது. இந்த போராட்டம் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. தெருவிளக்குகள் ஒளிராததை கண்டித்து மின்கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்
சிவகிரி அருகே தெருவிளக்குகள் ஒளிராததை கண்டித்து மின்கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை கட்டி தொங்க விட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அறச்சலூரில் பரபரப்பு; மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ– மாணவிகள் சாலை மறியல், 60 பேர் கைது
அறச்சலூர் அரசு பள்ளிக்கூடம் அருகே மடிக்கணினி வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. சுருக்கு வலைக்கு தடை; அமைச்சர் தலைமையில் ஆலோசனை, மீனவர்களுக்கு இடையே மோதல்
சுருக்கு வலை தடை தொடர்பாக அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
4. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் அனைத்து கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
5. திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.