தங்களின் செயல்பாடு மாநிலத்தின் அமைதி, முன்னேற்றம், நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ளது கிரண்பெடிக்கு, நாராயணசாமி கடிதம்


தங்களின் செயல்பாடு மாநிலத்தின் அமைதி, முன்னேற்றம், நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ளது கிரண்பெடிக்கு, நாராயணசாமி கடிதம்
x
தினத்தந்தி 13 Feb 2019 11:15 PM GMT (Updated: 13 Feb 2019 9:57 PM GMT)

தங்களின் செயல்பாடு புதுவை மாநிலத்தின் அமைதி, முன்னேற்றம், நிர்வாகத்திற்கு இடையூறாக இருப்பதாக கவர்னர் கிரண்பெடிக்கு, நாராயணசாமி கடிதம் அனுப்பினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

புதுவை மாநில கவர்னராக நீங்கள் பதவியேற்ற நாளில் இருந்து தங்களது செயல்கள், நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயக கோட்பாடுகளுக்கு முரணாகவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையிலும் உள்ளது குறித்து தங்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். புதுச்சேரியில் நல்ல நிர்வாக நெறிமுறைகளை பின்பற்ற தங்களது செயல்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தியுள்ளேன். ஆனால் உங்களது செயல்பாடுகள் புதுவை மாநிலத்தின் அமைதி, முன்னேற்றம், நல்ல நிர்வாகத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது.

தங்களது செயல்பட்டால் பல்வேறு தரப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு சில உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன். ரோடியர், சுதேசி மில் புனரமைப்பு சம்பந்தமாக புதுவை அமைச்சரவையின் முடிவுகளை தாங்கள் முற்றிலுமாக புறக்கணித்து உள்ளீர்கள். மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் புதுவை அரசுக்கு நிதி அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது சம்பந்தமாக கவர்னருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதன் நோக்கம் அதிகாரங்களை பரவலாக்கி நல்ல நிர்வாகத்தை அளிப்பதுதான். ஆனால் தங்கள் அந்த உத்தரவுகளை தங்களுக்கு சாதமாக அனைத்து அதிகாரங்களும் கவர்னருக்கே என்ற நோக்கில் தவறான அர்த்தம் பிறப்பித்து செயல்படுத்தாமல் உள்ளீர்கள்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரியாமல் அந்த துறைகளில் அதிகாரிகளுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து நேரடியாக உத்தரவு பிறப்பிப்பது தங்களது வழக்கமாக உள்ளது. புதுச்சேரி அரசு அலுவல் விதிகளின்படி ஒரு துறையின் அமைச்சர்தான் அந்த துறையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பு ஏற்கிறார். ஆய்வுகள் மற்றும் தினசரி பார்வையிடுதல் ஆகியவை புதுச்சேரி அரசு அலுவல் விதிகளின் கீழ் வருகின்றன. இப்படிப்பட்ட ஆய்வுகள் மற்றும் பார்வைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும். தாங்கள் பதவியேற்ற நாள் முதல் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரியாமல் இப்படிப்பட்ட ஆய்வுகளை நடத்தக்கூடாது என்று தங்களிடம் வலியுறுத்தி உள்ளேன.

ஆனால் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் சுய விளம்பரத்தை கருத்தில் கொண்டு 5 கேமராக்கள் தங்களை சுற்றிவர ஆய்வுகளையும், கள ஆய்களையும் நடத்துவது தங்களது வழக்கமாக உள்ளது. தங்களுடன் வரும் அதிகாரிகளை சத்தமிட்டு கடிந்துகொள்வது, தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அடிப்படையில் சம்பந்தமில்லாத கொள்கைகள், திட்டங்கள், விதிமுறைகள் ஆகியவைகளை அதிகாரிகளிடம் கூறி உருவாக்க சொல்வது, இதுபோன்ற தங்களது செயல்பாடுகளை நேரடியாக சமூக வலைதளங்கள் மூலமாகவும் காட்டி அதிகாரிகளை பொதுமக்கள் மத்தியில் குறைத்து மதிப்பிட செய்வது ஆகியவை தங்களது வழக்கமாக உள்ளது.

துறை செயலர் மற்றும் துறை தலைவர்களை கொண்ட நேரடி கூட்டங்களை அடிக்கடி கூட்டுவது, அமைச்சர்களுக்கு தெரியாமல் உத்தரவுகள் பிறப்பிப்பது கவர்னரின் பணி வரம்புகளுக்குள் வரவில்லை. இது புதுச்சேரி அரசு அலுவல் விதிகளுக்கு முரணாக உள்ளது. கோப்புகளை கவர்னர் மாளிகையில் இருந்து நேரடியாக வாய்மொழி உத்தரவு மூலம் பெறுவது என்ற வழக்கம் அலுவலக விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறானது.

பட்டினிச்சாவை தடுப்பது மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு பாதுகாப்பு அளிப்பது ஒரு அரசின் தலையாய கடமையாகும். ஆனால் இலவச அரிசி திட்டத்தை நிறுத்தி, தங்களின் ஒருதலைபட்சமான மனநிலைக்கு ஏற்றவாறு திட்டங்களை மாற்றி அமைப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைகளை பெறாமல் செயல்படுவது தங்களின் வழக்கமாக உள்ளது. பொங்கல் பண்டிகையில் பொங்கல் பரிசு திட்டத்தை தவறான முறையில் விளக்கம் ஏற்படுத்திக்கொண்டு தன்னிச்சையாக இந்த திட்டத்தை நிறுத்தியது மண்ணின் கலாசாரம் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மாறானது.

தங்களுக்கு அனுப்பப்படும் கோப்புகளை நேரடியாக அமைச்சர்களுக்கு தெரியாமல் தங்களது மாறுபட்ட உத்தரவு மற்றும் அறிவுறுத்தலுடன் அதிகாரிகளுக்கு அனுப்பவது என்ற புதிய நடைமுறையை ஏற்படுத்தி வருகிறீர்கள். தங்களது உத்தரவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளை மிரட்டுவதும், வற்புறுத்துவதும், விதிமுறைகளுக்கும், வழக்கமான நடைமுறைகளுக்கும் மாறாக உள்ளது.

அரசால் வழங்கப்படும் விருது மற்றும் சான்றிதழ்கள் சில அடிப்படைகளை கொண்டு வழங்கப்படுகிறது. அப்பொழுதுதான் அது சமூகத்தால் மதிப்பு மிக்கதாக கருதப்படும். ஆனால் தாங்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் விருதுகளையும், சான்றிதழ்களையும் புதிதாக கண்டுபிடித்து வழங்கி வருவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதுடன், நிர்வாக நெறிமுறைகளுக்கு மாறாக உள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு தேர்வுகள் தங்களால் நடத்தப்படுவது சட்ட அடிப்படைகளுக்கு மாறாக உள்ளது. இந்த தேர்வுகள் அதிகாரிகளுக்கு தேவையற்ற அவமானத்தை ஏற்படுத்தி விரக்தி அடையும் அதிகாரிகள் குழுவை உருவாக்கி வருகிறது.

தங்களது முறையற்ற, தன்னிச்சையான உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகளை அச்சுறுத்தி அவர்களது எதிர்காலத்தை கெடுக்க முயற்சிப்பதும் தற்போது தெளிவாக தெரிகிறது. தேவைக்கு அதிகமாக சமூக ஊடகங்களை நிர்வாகத்தில் பயன்படுத்துவதும், சமூக வலைதளங்களில் தினசரி கருத்துகளை வெளியிடுவதும் சமூக வலைத்தளங்களில் அதிகாரிகளை பதிலளிக்க வற்புறுத்துவம் விதிமுறைகளுக்கு மாறானது.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story