திருவாடானை பாரதிநகர் பகுதியில் இரவு நேரங்களில் நீரேற்றம் செய்வதால் குடிநீர் திருட்டு நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை


திருவாடானை பாரதிநகர் பகுதியில் இரவு நேரங்களில் நீரேற்றம் செய்வதால் குடிநீர் திருட்டு நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
x
தினத்தந்தி 14 Feb 2019 4:00 AM IST (Updated: 14 Feb 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை பாரதிநகர் பகுதியில் இரவு நேரங்களில் நீரேற்றம் செய்வதால் குடிநீர் திருட்டு அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள கல்லூர் ஊராட்சி பாரதிநகரில் பாண்டுகுடி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆழ்குழாயில் இருந்து மாதம் ஒருமுறை என ஒவ்வொரு பகுதியாக பிரித்து சுழற்சி முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இங்கிருந்து பெரும்பாலும் குடிநீர் இரவு நேரங்களில் நீரேற்றம் செய்யப்படுவதால் பெரும்பாலான பொதுமக்கள் இரவு நேரங்களில் கண்விழித்து குடிதண்ணீரை பிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தங்களுக்கு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளும் சிலர் குடிநீர் குழாய்களில் இருந்து மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை திருடி தொட்டிகளில் சேமித்து வைப்பது, தோட்டங்களுக்கு பாய்ச்சுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் பாரதிநகர் ஆழ்குழாயில் உள்ள மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் பல நேரங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் குடிநீர் திருட்டு சம்பவங்களை தடுக்க பாரதிநகர் ஆழ்குழாயில் இருந்து இரவு நேரங்களில் நீரேற்றம் செய்வதை நிறுத்த குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.


Next Story