மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் ஆத்திரம் சமையல் கியாஸ் சிலிண்டரை திறந்து வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி


மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் ஆத்திரம் சமையல் கியாஸ் சிலிண்டரை திறந்து வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 10:07 PM GMT)

மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி, வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் கியாசை திறந்து தீ வைத்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூரமங்கலம், 

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 37). இவர் வெல்டிங் பட்டறை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி. வெங்கடாசலத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் குரங்குசாவடி பகுதியில் சந்துகடையில் மது விற்பனை செய்வதை தடை செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் தனலட்சுமி பங்கேற்றார்.

இந்த போராட்டத்தில் எதற்காக கலந்து கொண்டாய்? என வெங்கடாசலம் அவருடைய மனைவியிடம் கேட்டதுடன், சந்து கடையில் மதுவிற்றால் உனக்கு என்ன? என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் வெங்கடாசலம் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் பணம் இல்லை எனவும், குழந்தைகளுக்கு செலவு செய்யவே பணம் இல்லை எனவும் கூறினார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடாசலம் தனது வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரை திடீரென திறந்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமி குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் சமையல் கியாஸ் பரவிய பின்பு, வெளியே வந்த வெங்கடாசலம் வீட்டின் ஜன்னல் வழியாக தீயை பற்ற வைத்து உள்ளே போட்டார். இதனால் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தனர். இதனிடையே இந்த தீ வீட்டுக்குள் பற்றி எரிந்து வீட்டின் ஓடுகள் சிதறியதுடன், பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story