திருச்செந்தூரில் மாசித் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவின் 4-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருச்செந்தூர்,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
4-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மாலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் புஷ்ப காவடி, பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
5-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story