விளைநிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தும் சின்னதம்பி யானையை வனத்துக்குள் விரட்டக்கோரி விவசாயிகள் மறியல்


விளைநிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தும் சின்னதம்பி யானையை வனத்துக்குள் விரட்டக்கோரி விவசாயிகள் மறியல்
x
தினத்தந்தி 13 Feb 2019 9:45 PM GMT (Updated: 13 Feb 2019 10:10 PM GMT)

மடத்துக்குளம் அருகே விளைநிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தும் சின்னதம்பி யானையை வனத்துக்குள் விரட்டக்கோரி விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடி புத்தூர் பகுதியில் சின்னதம்பி யானை தஞ்சம் புகுந்துள்ளது. கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த அது தற்போது, விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களில் மட்டும் 27 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி உள்ளது.

இதுதவிர ஒரு ஏக்கர் வாழை, 4 ஏக்கர் கரும்பு, ஒரு ஏக்கர் நெல் பயிர், ஒரு ஏக்கர் வெங்காய செடிகள் என்று சின்னதம்பி யானையால் ஏற்பட்ட சேதார பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டுவிட வேண்டும் என்றும், யானையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கும், மரங்களுக்கும் இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று மடத்துக்குளம் பகுதியில் ஒன்று திரண்டனர்.

அவர்கள் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் பழனி-உடுமலை நெடுஞ்சாலையில் பகல் 12 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, உங்கள் கோரிக்கை தொடர்பாக, சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தாசில்தார் மூலம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அதற்குரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதைதொடர்ந்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story