தீயணைப்பு துறையில் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பிப்போர் அலைக்கழிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தீயணைப்பு துறையில் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பிப்போர் அலைக்கழிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 Feb 2019 3:57 AM IST (Updated: 14 Feb 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு துறையில் தடையில்லா சான்று கோரி விண்ணப்பிப்போர் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளதால் தகுதி உள்ளவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழக அரசின் உத்தரவுப்படி தொழில்முனைவோர், வணிக நிறுவனத்தினர், ஆஸ்பத்திரிகள் நடத்துவோர், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் தீயணைப்பு துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற்றால்தான் அவர்களுக்கு தொழில் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து உரிமங்கள் பெற முடியும். பாதுகாப்பு கருதி தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தீயணைப்பு துறையிடமிருந்து தடையில்லா சான்று கோரி விண்ணப்பித்தால் அத்துறையினர் விண்ணப்பதாரரின் நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றை நேரடி ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு அம்சங்கள் முறையாக இருக்கும் பட்சத்தில் தடையில்லா சான்று வழங்க வேண்டும். ஆனால் வணிக நிறுவனங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் முறையாக தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தீயணைப்பு துறையினர் தடையில்லா சான்று வழங்காமல் விண்ணப்பதாரர்களை அலைக்கழிக்கும் நிலை உள்ளது.

சில எதிர்பார்ப்புகளுடன் விண்ணப்பதாரர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டால் உடனடியாக தடையில்லா சான்று வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் ஆய்வு நடத்தாமலேயே ஆதாயம் கிடைக்கும் பட்சத்தில் சான்றிதழ் வழங்கும் நிலையும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேட்டால் பொதுமக்கள் நலனுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காத நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.

மேலும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கும் இடங்களுக்கு கூட தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்று வலியுறுத்தும் நிலையும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு துறையிடம் தடையில்லா சான்று கோரி விண்ணப்பிப்பவர்களை அலைக்கழிக்காமல் அவர்கள் தொழில் நடத்தும் இடங்களை முறையாக ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ள நிலையில் தாமதமில்லாமல் தடையில்லா சான்று வழங்க உத்தரவிடுவதுடன் விண்ணப்பதாரர்களை தேவையில்லாமல் அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story