ஓசூர்– நாகர்கோவில் மாநகராட்சியானது சிவகாசிக்கு வாய்ப்பு நழுவுகிறதா?


ஓசூர்– நாகர்கோவில் மாநகராட்சியானது சிவகாசிக்கு வாய்ப்பு நழுவுகிறதா?
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 10:34 PM GMT)

ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகாசி மாநகராட்சியாக மாற்றப்படும் என அறிவித்து 1¼ ஆண்டுகள் ஆன நிலையில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாதது சிவகாசி மக்களை வேதனையடைய செய்துள்ளது.

சிவகாசி,

தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகள் உள்ள நிலையில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் 23.10.2017 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகாசி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியிட்டு 1¼ ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அதற்கான பணிகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு பின்னர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை, மாநகராட்சியாக அறிவிக்க தேவையான பணிகள் விரைவாக நடைபெற்று நேற்று சட்டசபையில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி, ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், பள்ளப்பட்டி, சாமி நத்தம், செங்கமலநாச்சியார்புரம், தேவர்குளம், அனுப்பன்குளம் ஆகிய பஞ்சாயத்து பகுதிகளை சேர்த்து சிவகாசியை மாநகராட்சியாக உருவாக்கி தர வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கைளை ஏற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் அது தற்போது வரை அறிவிப்போடு இருக்கிறது. அதன் பின்னர் மாநகராட்சியாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகள் விரைவில் மாநகராட்சியாக தரம் உயர போகிறது. ஆனால் சிவகாசிக்கு மட்டும் அந்த வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் சிவகாசி மக்கள் மிகவும் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

எனினும் இதற்கான மசோதா சட்டசபையில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிவகாசி நகராட்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் அலுவலகம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. அப்போது அதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தற்போது நகராட்சி அலுவலகம் கட்ட பூமி பூஜை போட்டாலும் இது விரைவில் மாநகராட்சி அலுவலகமாக மாறும் என்பதால் கட்டிடத்தை நல்ல தரத்துடன், குறுகிய காலத்திற்குள் கட்டி முடியுங்கள் என்றார். தற்போது கட்டிடம் கட்டும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது. ஆனால் மாநகராட்சி அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. வாய்ப்பு நழுவி விடுமோ என்ற அய்யம் தற்போது தோன்றி இருக்கிறது.

எனினும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சிவகாசி நகர் மக்கள் உள்ளனர். சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நிதியை கொண்டு வளர்ச்சி பணிகள் அதிக அளவில் செய்ய முடியும். முற்றிலும் கிராமப்புறங்களை அதிகம் கொண்ட பஞ்சாயத்து பகுதியில் சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதால் அதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே செய்ய வேண்டும். பட்டாசு தொழிலில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள குட்டிஜப்பானில் மாற்று தொழில்கள் வளர்ச்சி பெறவும் இந்த அறிவிப்பு சாதகமாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.


Next Story