கூடலூர் மைத்தலை மண்ணடியான் குளத்தில் கோழி இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு
கூடலூரில் மைத்தலை மண்ணடியான் குளத்தின் கரையோரத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் தண்ணீர் மாசு அடைந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
கூடலூர்,
கூடலூர் நகரின் மையப்பகுதியில் மைத்தலை மண்ணடியான் குளம் அமைந்துள்ளது. முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் 18-ம் கால்வாய் வழியாக குளத்திற்கு வந்து சேருகிறது. இந்த குளத்தில் நிரப்பப்படும் தண்ணீர் மூலம் 406 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இருபோகம் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அதுமட்டும் இன்றி கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் பயன்பட்டு வருகிறது.
இந்த குளத்தின் கரையோரத்தில் கூடலூர் பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். அந்த கழிவுகள் குளத்தின் தண்ணீரில் சென்று விழுகின்றன. இதனால் தண்ணீர்் மாசு அடைந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் குளத்தை கடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் அந்த பகுதியில் நிலத்தடி நீரும் மாசு அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது குளத்தின் கரையோரத்தில் கொட்டப்பட்டு உள்ள கோழி இறைச்சி கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். மேலும் அந்த பகுதியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். குளத்தின் கரையோரத்தில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களை பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story