நிலம் வழங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய பணிக்கு 28–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நிலம் வழங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய பணிக்கு 28–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2019 4:45 AM IST (Updated: 14 Feb 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

நிலம் வழங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளுக்கு வருகிற 28–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

மதுரை,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைவதற்காக, அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை கொடுத்து உதவினார்கள். நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வித்தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று 12.2.1999–ம் ஆண்டில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 18–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் அணுமின் நிலையம் அமைய நிலம் அளித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு 1999–ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு வேலையில் உள்ளூர்காரர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அணுமின்நிலைய சி, டி பிரிவு வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4–வது அணு உலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக சி மற்றும் டி பிரிவில் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் பணியாளர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’’ என்றார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வழங்க முன்னுரிமை அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடம் அளித்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். அணுஉலை அமைய இடம் அளித்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், நிலம் வழங்கியதற்கான சான்று, உரிய கல்வி சான்றிதழ்களுடன் அணுமின் நிலையத்தில் சி, டி பிரிவு பணிக்கு வருகிற 28–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, எத்தனை பேர் விண்ணப்பித்தனர், அதில் எத்தனை பேர் தகுதியுடையவர்கள், எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன? ஏன் நிராகரிக்கப்பட்டது? என்ற விவரங்களை 4 வாரத்தில் அணுமின் நிலைய நிர்வாகம் ஐகோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 3–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story