ஜாமீன் கிடைக்க சாதகமாக செயல்படுவதாக கூறி ரூ.80 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


ஜாமீன் கிடைக்க சாதகமாக செயல்படுவதாக கூறி ரூ.80 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2019 4:30 AM IST (Updated: 14 Feb 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீன் கிடைப்பதற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி ரூ.80 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

ஜாமீன் கிடைப்பதற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி ரூ.80 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

ரூ.3 லட்சம் லஞ்சம்

மும்பை தேவ்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் குற்றவழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தனது சகோதரர் மற்றும் நண்பரை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் தேவ்னார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தத்தாத்ரே கோவிந்தை சந்தித்து பேசினார்.

அப்போது, தனக்கு ரூ.3 லட்சம் லஞ்சமாக தந்தால் இருவருக்கும் ஜாமீன் கிடைப்பதற்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார். இதை கேட்டு அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அவர் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் தருவதாக தெரிவித்தார். இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தத்தாத்ரே கோவிந்த் சம்மதம் தெரிவித்தார்.

கைது

இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் கொடுத்த யோசனையின்படி, அந்த நபர் தேவ்னார் போலீஸ் நிலையத்திற்கு சென்று முதல் தவணையாக ரூ.80 ஆயிரம் கொண்டு வந்து இருப்பதாக இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.

இதையடுத்து அந்த பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர் தத்தாத்ரே கோவிந்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Next Story