அறிவியல் ஆர்வமுள்ள 9-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா


அறிவியல் ஆர்வமுள்ள 9-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா
x
தினத்தந்தி 14 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் அறிவியல் ஆர்வமுள்ள 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 நாட்கள் கல்வி சுற்றுலாவாக ரெயில் மூலம் பெங்களூரு சென்றனர்.

திண்டுக்கல், 

அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற் காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் செலவுத்தொகையாக தலா ரூ.2 ஆயிரத்தை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்குகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்கள், வருகைப்பதிவு அதிகம் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் அறிவியல் கண்காட்சி, போட்டி தேர்வுகளில் பங்கேற்றவர்கள், சாரணர், தேசிய மாணவர் படை, பசுமை படை, இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களும் தேர்வாகினர்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 17 பள்ளிகளை சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கணிதம், அறிவியல் மையங்களை பார்வையிட அரசு செலவில் பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ரெயில் மூலம் சென்றனர்.

இவர்கள் 3 நாட்கள் பெங்களூருவில் தங்கிருந்து கணிதம், அறிவியல் மையங்களை பார்வையிடுகின்றனர். மாணவர்களுக்கு உதவியாக 6 ஆசிரியர்களும் உடன் சென்றுள்ளனர். முன்னதாக ரெயில் நிலையத்தில் அவர்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

Next Story