கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரிய கடைகள் இடித்து அகற்றம் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரிய கடைகள் இடித்து அகற்றம் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 4:44 PM GMT)

சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. முன்னதாக கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடையாறு, 

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 200 கடைகள் உள்ளன. போலீஸ் நிலைய சாலையை ஒட்டியுள்ள சில குடியிருப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில், அதே பகுதியில் உள்ள 25 கடைகளையும் அகற்றிவிட்டு அந்த பகுதியில் புதிதாக 4 மாடியில் 128 குடியிருப்புகள் மற்றும் 40 கடைகள் கட்டும் திட்டத்துக்காக குடிசை மாற்று வாரியம், கடைக்காரர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கி, கடந்த 2-ந்தேதி கடைகளை இடித்து அகற்ற அதிகாரிகள் வந்தனர்.

மேலும் இந்த 25 கடை வியாபாரிகளும் குடிசை மாற்று வாரியத்துக்கு கடந்த 2 வருடமாக வாடகை பாக்கி வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, கடைக்காரர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனரை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்க அவகாசம் தருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்று கடைகளை இடிக்கும் பணியை தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனரை சந்தித்த 25 கடை வியாபாரிகளும், இன்னும் ஒரு வார காலத்தில் வாடகை பாக்கியை செலுத்தி விடுவதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து வாடகை பாக்கியை முழுமையாக செலுத்துபவர்களுக்கு, புதிய கடை கட்டியதும் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும் என்றும், அனைவருக்கும் மாற்று இடம் வழங்க சாத்தியம் இல்லை எனவும் குடிசை மாற்று வாரியம் தெரிவித்தது.

ஆனால் 9 கடைகாரர்கள் மட்டுமே வாடகை பாக்கியை செலுத்தி உள்ளனர். இதையடுத்து அந்த 9 பேருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கடைக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு முடிந்த நிலைவில், நேற்று காலை கடைகளை இடித்து அகற்ற நிர்வாக பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த 25 கடைக்காரர்களும், உரிய மாற்று இடம் வழங்காமல் எங்கள் கடைகளை அகற்ற விடமாட்டோம் எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், புதிய கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முறையில், தற்போது கடையை இழக்கும் அனைவருக்கும் புதிய கடை கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே எங்கள் அனைவருக்கும் மீண்டும் புதிய கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும், வாடகை பாக்கியை செலுத்த மேலும் 2 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். 2 நாட்களில் வாடகை பாக்கியை செலுத்தி கடைக்கான அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு நாங்களே கடையை காலி செய்து தருகிறோம் என அதிகாரிகளிடம் கெஞ்சினர்.

ஆனால் புது கடை ஒதுக்கீடு குறித்து உத்தரவாதமோ, காலஅவகாசம் அளிக்கவோ தங்களுக்கு அதிகாரம் இல்லை என அதிகாரிகள் கைவிரித்தனர்

கடைகளை இடிக்க தடை கோரிய வழக்கு கோர்ட்டில் உள்ளதாக கூறி தங்கள் வக்கீல்களுடன் வந்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் தடை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என தெரிவித்த அதிகாரிகள், கடைகளை அகற்றுவதில் குறியாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்துக்கு பிறகு, நிர்வாக பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் முருகேசன், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் கடைக்காரர்களுடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, முதல் கட்டமாக வாடகை பாக்கியை செலுத்தி கடைக்கான அடையாள அட்டையை பெற்ற 9 பேரின் கடைகளை அகற்றுவதாகவும், அடுத்த கட்டமாக மீதமுள்ள கடைகளை அகற்றவும் உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, பொக்லைன் எந்திரம் மூலம் 9 கடைகளில் நேற்று 6 கடைகள் இடித்து அகற்றப்பட்டது. மீதி கடைகள் இன்று இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

45 வருடமாக தங்களுக்கு வாழ்வளித்த கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதை கண்ட சில பெண்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

Next Story